சென்னை: என்.எல்.சி நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த இழப்பீட்டு தொகையை வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி நிர்வாகம் 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.
அப்போது அந்த நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த வாய்க்கால் வெட்டும் பணியின் போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தை பல ஆண்டுகளாக என்.எல்.சி நிர்வாகம் பயன்படுத்தவில்லை என்பதால், நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். மேலும் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்.எல்.சி. தொந்தரவு தரக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. நிலத்தை பயன்பாட்டிற்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, நிலத்தை கையகப்படுத்தியபின் சாகுபடி செய்ய அனுமதித்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். மேலும், என்.எல்.சி விரிவாக்கப் பணிக்காக அரசு கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு, என்.எல்.சி நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்எல்சி நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள்
உரிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று என்.எல்.சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்க என்எல்சி தவறிவிட்டது.
அதில் பயிரிட்டது விவசாயிகளின் தவறு. இரு தரப்பும் 50:50 பொறுப்பாவார்கள். என்.எல்.சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இனி எந்த விவசாய பணிகளும் மேற்கொள்ளக்கூடாது.
நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது. அப்படி செய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், என்எல்சி நிறுவனம் சேதப்படுத்திய நெற்பயிருக்கு, வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்,
அடுத்த கட்ட விசாரணை திங்கட்கிழமை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.