காலிஸ்தான் கருத்தியலுக்கு ஆதரவாக செயல்படும் பஞ்சாபின் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ எனும் இயக்கத்தின் தலைவரான ‘அம்ரித் பால் சிங்கை’ பிடிக்க அம்மாநில காவல்துறை தொடர்ந்து தீவிரமாக முயன்று வருகிறது.
பஞ்சாபை பிரித்து தனி நாடாக மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக காலிஸ்தான் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த காலிஸ்தான் கருத்தியலுக்கு ஆதராவாக பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இவர்களுக்கு வெளிநாடுகளில் பணியாற்றும் சீக்கியர்கள் நிதி உதவி செய்தவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அமைப்புகளில் ஒன்றுதான் ‘வாரிஸ் பஞ்சாப் டி’.
சில நாட்களுக்கு முன்னர் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பஞ்சாபின் ரூப்கர் மாவட்டத்தில் ஒரு கடத்தல் சம்பவம் அரங்கேறியது.
இதனையடுத்து கடத்தப்பட்டவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதாவது இந்த சம்பவத்தில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவராக உள்ள அம்ரித் பால் சிங்கின் உதவியாளரான ‘லவ் ப்ரீத் சிங்’ என்பவரும் ஈடுபட்டிருந்தார். எனவே அவரும் கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இது இப்படி கைது நடவடிக்கை எதுவும் காவல்துறை மேற்கொண்டதில்லை.
இப்படி இருக்கையில் இந்த அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங்கின் உதவியாளரையே காவல்துறை தூக்கியிருந்தது அம்மாநிலத்தில் பேசுபொருளானது.
அதேபோல ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பும் தங்கள் நிர்வாகியை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தது.
ஆனால் காவல்துறை இதனை கண்டுக்கொள்ளவில்லை. எனவே பிரச்னை பெரியதாக வெடித்தது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் அஜினாலா போலீஸ் ஸ்டேனஷ் நோக்கி அணி திரண்டனர். இவர்கள் கைகளில் வாள், துப்பாக்கி என பயங்கர ஆயுதங்களை கொண்டிருந்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து லவ் ப்ரீத் சிங் விடுவிக்கப்பட்டார். ஆனால் இது அம்மாநில காவல்துறையின் வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக பார்க்கப்பட்டது.

எனவே இதற்கு காரணமாக ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் திட்டமிட்டது.
இந்த திட்டம் அனைத்தும் ரகசியமாக உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தயாரிக்கப்பட்டது.
இருப்பினும் இதனை எப்படியோ அறிந்துக்கொண்ட அம்ரித் பால் சிங் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
எனவே அவரை தேடி பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் ஏற்படும் பதற்றத்தை தனிக்க இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பின்னர் அம்ரித் தப்பி சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.
கடைசியில் வேறு வழியின்றி பொதுமக்களிடம் பொலீஸ் உதவியை நாடியது. அம்ரித் பால் குறித்த தகவல்கள் தெரிந்தால் உடனடியாக போலீசை அணுகும்படி கேட்டுக்கொண்டது.
ஆனால் எவ்வளவுதான் முயன்றாலும் தற்போது வரை அவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் அம்மாநில டிஜிபி, காவலர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதாவது இந்த மாதம் இறுதியில் சீக்கியர்களுடன் சந்திப்பை அம்ரித்பால் மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல மத ஊர்வலத்திற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
எனவே இதற்கு முன்னதாக அவரை பிடிக்க வேண்டும்.
அதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை மாநிலத்தின் எந்த காவலருக்கும் விடுப்பு கிடையாது என்று டிஜிபி கவுரவ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.