மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி தின விளக்கு பூஜை. 108 பெண்கள் விளக்கேற்றி வழிபாடு சிறப்பாக நடந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் புகழ்பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கின்றார்கள்.
வருடாந்திர உற்சவத்தின் போது கிராமத்தினர் புதிய தேரில்
அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைகின்றார்கள். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழா நடக்கும்போது பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அற்பணிக்கின்றார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள். பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். ஆக விமர்சையாக நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில், ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்றிணைந்து திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.
ஆடி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட
பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து உற்சவர் அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் 108 பெண்கள் திருக்கோயில் வளாகத்தில் அமர்ந்து விளக்கேற்றி அம்மனை வழிபட்ட போது பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடி பம்பை மேளம் உடுக்கையுடன் அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாட்டினை திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் செந்தில்குமார் மேலாளர் மணி உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.