தந்தையின் நண்பர் என்ற போர்வையில் சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கம் டி.வி.புரம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனன் (56) , ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இவர் தற்போது ஜோதிடராக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருவதால் அந்த பகுதியில் பிரபலமாகவும் இருந்திருக்கிறார். இவரது நண்பர் ஒருவர் வைக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் அவர்களது வீட்டுக்கு சுதர்சனன் அடிக்கடி சென்று வருவது வழக்கம் .
ஜோதிடரின் நண்பருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். ஒரு மகனும் இருக்கிறார். தந்தையின் நண்பர் என்பதால் ஜோதிடரின் வீட்டுக்கு சிறுவன், சிறுமி இருவரும் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நண்பரின் வீட்டுக்கு வந்த ஜோதிடர், சிறுவர், சிறுமி இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களும் அங்கு சென்று விளையாடியுள்ளனர். அப்போது சிறுவனை அழைத்த சுதர்சனன் இறைச்சி வாங்கி வருமாறு காசு கொடுத்து அனுப்பியுள்ளார். சிறுவன் வீட்டை விட்டு சென்றவுடன் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்கச் செய்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுமி மயங்கியதும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் கடைக்கு சென்ற சிறுவன் திரும்பி வந்ததும் அறையில் இருந்த சிறுமியை மயக்கம் தெளியவைத்து வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை சுதர்சனன் வீடியோ, புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது.
இதை காட்டி காட்டியே பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும் தெரிதிறது. இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்றும் அப்படியே சொன்னால் தம்பியை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியதால் இந்த கொடூர சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
ஆனால் சுதர்சனனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமானது. சிறுமியின் உடல் நிலையும் பாதித்தது. சிறுமி தனது நிலை குறித்து தனது தோழிகளிடமும் ஆசிரியர்களிடமும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், சிறுமியின் தாயை அழைத்து ஜோதிடரின் வெறித்தனத்தை தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், சுதர்சனத்திடம் கேட்ட போது தன்னிடம் உள்ள வீடியோவை சமூகவலைதளங்களில் விட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
சிறுமிக்கு நேர்ந்த இந்த பாலியல் வன்கொடுமை குறித்து வைக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி மாஜிஸ்திரேட்டு முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சுதர்சனனை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.