கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் தாவரக்கரை, கண்டகானப்பள்ளி, கெண்டகாணப்பள்ளி மற்றும் கேரட் ஆகிய கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்து
ராகி, தக்காளி, முட்டைகோஸ், தென்னை மா உள்ளிட்ட விவசாய விளை பயிர்களை சேதப்படுத்தி வந்தது. கிராம மக்களையும் அச்சுறுத்தி வந்தது.
இதனையடுத்து கிராம மக்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு கோரிக்கையை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று வனச்சரகர் தலைமையில் வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த 5 காட்டு யானைகளையும் பட்டாசுகள் வெடித்து விரட்டும் பணிகளை மேற்கொண்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின் இந்த காட்டு யானைகள் அனைத்தும் நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
இதனால் கிராமப்புற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். ஒவ்வொரு முறையும் யானைகள் வரும்போது பயிர்களை சேதப்படுத்துவதும் அவற்றை விரட்டி அடிப்பதும் வேலையாக போய் உள்ளது. யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் இருக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை இந்த மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வந்துள்ளது. மேலும் யானைகள் சாலையை கடக்கின்ற போது வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.