உத்தரபிரதேச மாநிலம் பன்ஸ்திஹ் பகுதியில் 18 வயது பட்டியலின பெண்ணை கடத்தி கற்பழிப்பு செய்த வழக்கில் , 23 வயது இளைஞர் மற்றும் குற்றவாளிக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பன்ஸ்திஹ் பகுதியில் தலித் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக 23 வயது இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
கைது செய்யப்பட்ட விகேஷ் திவாரி (23) பல்லியாவில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என போலீஸ் சூப்பிரண்டு எஸ் ஆனந்த் தெரிவித்துள்ளார் .
ஜூன் 22 ஆம் தேதி, உத்தர் தோலா கிராமத்தைச் சேர்ந்த விகேஷ் திவாரி, அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றதாக,பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் .
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜூலை 20 அன்று, விகேஷ் திவாரி, அவரது தந்தை ஹரேந்திர திவாரி, தாய் ஊர்மிளா திவாரி மற்றும் சகோதரர் ரித்தேஷ் திவாரி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366 (கடத்தல்) மற்றும் பட்டியல் சாதிகள்/பழங்குடியினர் (வன்கொடுமைகளைத் தடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது .
பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் போலீசார் விகேஷ் திவாரியை கைது செய்து அந்த பெண்ணை மீட்டனர்.மேலும் அந்த 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், விகேஷ் திவாரி தன்னை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை தொடர்ந்து, ஐபிசியின் பிரிவு 376 (கற்பழிப்பு) எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.