லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்ற 40 வயது நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் ராம்நகர் பகுதியில்தான் இந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த 40 வயதான ரிங்கு வர்மாவுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அதே பகுதியை சேர்ந்த 5 வயது இஸ்லாமிய சிறுமியும் ரிங்கு வெர்மாவின் குழந்தையுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் அந்த பெண் குழந்தை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் கலக்கமடைந்தனர். குழந்தையை காணவில்லை என அவரது தாயும் உறவினர்களும் ஊர் முழுவதும் தேடி அலைந்தனர். இந்த நிலையில் சிறுமியுடன் விளையாடிய சிறுவன் தனது தந்தைதான் அவரை அழைத்து சென்றதாக தெரிவித்து உள்ளான்.
பல மணி நேர தேடுதலுக்கு பிறகு அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் ஒரு கரும்பு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டார். அவரை உடனடியாக மீட்டு பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக 40 வயதான ரிங்கு வெர்மாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து கண்ணீர் மல்க சிறுமியின் தாய் ஊடகங்களுக்கு பேட்டியளித்து உள்ளார். அப்போது பேசிய அவர், “என் மகளை பலாத்காரம் செய்த ரிங்கு வெர்மா கரும்பு தோட்டத்தில் அவளை போட்டுவிட்டு சென்றுவிட்டான். கீழே கிடந்த என் மகளின் நிலையை கண்டவுடன் அவர் இறந்துவிட்டார் என்று நினைத்தேன்.
அந்த அளவுக்கு ரத்த வெள்ளத்தில் அவர் கிடந்தார். என் மகளை பலாத்காரம் செய்த பிறகு அவரை கொலை செய்ய ரிங்கு முயன்று இருக்கிறார். அவர் மீது நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அந்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.” என்றார். இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த அப்பகுதியில் காவல் அதிகாரி அங்கித் திரிபாதி, “ரிங்கு வெர்மாவும் பாதிக்கப்பட்ட சிறுமியும் ஒரே பகுதியில் வசித்து வந்தவர்கள். அந்த சிறுமி ரிங்கு வெர்மாவின் குழந்தையும் எப்போது விளையாடுவார். தந்தை சிறுமியை தனியாக அழைத்து சென்றதை காட்டிக்கொடுத்ததே அவரது மகன் தான்.
ரிங்கு வெர்மாவை நாங்கள் கைது செய்து இருக்கிறோம். அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவோருக்கான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளோம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.