சூலூரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அடுத்த சூலூர் அருகே கலங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன். இவர் கணியூர் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதனால் சம்பவத்தன்று தனது சொகுசு காரில் கோவையில் இருந்து, கலங்கல் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் தனியாக சென்று கொண்டிருந்தார்.

சூலூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கேக்கடையின் முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை உடைத்துக் கொண்டு சுவற்றில் மோதி நின்றது.
அப்போது காரில் இருந்த ஏர் பேக்குகள் உடனடியாக திறந்ததால் நல்வாய்ப்பாக ஜெகதீஸ்வரன் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் விபத்தில் காரின் எஞ்சின் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது.

அப்போது திடீரென்று எஞ்சினில் இருந்து புகை வெளியேறியதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீசார், காரை அப்புறப்படுத்தி ஜெகதீஸ்வரன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பதற வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.