பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின் பேரில், கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களை வாங்குவதில் தில்லி மக்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, புதுதில்லியின் மையப்பகுதியில் உள்ள கன்னாட் பிளேஸில் உள்ள முதன்மை கதர் பவனில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,52,45,000 மதிப்புள்ள கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
காந்தி ஜெயந்தி அன்று காந்தியின் பாரம்பரிய கதர் தயாரிப்புகள் அமோகமாக விற்கப்பட்டதற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் “பிராண்ட் பவர்”, மக்களிடம் அவரது வரலாறு காணாத புகழ் ஆகியவையே காரணம் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி) தலைவர் மனோஜ் குமார் கூறினார். 2023 செப்டம்பர் 24 அன்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், காந்தி ஜெயந்தி நாளில் ஏதேனும் ஒரு கதர் பொருளை வாங்குமாறு பிரதமர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் என்றும், இந்த வேண்டுகோள் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் விற்பனையில் ஒரு புதிய சாதனை படைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அண்மைக்கால விற்பனைத் தரவுகளின்படி, கடந்த 2022-23 நிதியாண்டில், காந்தி ஜெயந்தி அன்று, தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில், விற்பனை ரூ.1,33,95,000 ஆக இருந்தது, இந்த முறை இது ரூ.1,52,45,000-ஐ எட்டியுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல் வாடிக்கையாளராக, கே.வி.ஐ.சி தலைவர் மனோஜ் குமார் அக்டோபர் 2 அன்று காலை கன்னாட் பிளேஸில் உள்ள கதர் பவனில் கதர் ஆடைகளை வாங்கி யு.பி.ஐ மூலம் டிஜிட்டல் கட்டணம் செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி, பல சந்தர்ப்பங்களில், தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் கதர் பொருட்களை வாங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கே.வி.ஐ.சி தலைவர் மனோஜ் குமார் கூறினார். புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மற்றும் தேசிய கைத்தறி தின விழாவில் பேசிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில், ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ மற்றும் ‘ உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளித்தல்’ என்ற மந்திரம் எவ்வாறு கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை ரூ.1.34 லட்சம் கோடியைத் தாண்ட வழிவகுத்தது என்று குறிப்பிட்டார். ஜி20 உச்சிமாநாட்டின் போது, மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராஜ்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகத் தலைவர்களை கதர் ஆடைகளுடன் வரவேற்றதன் மூலம், பிரதமர், காதிக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கியது மட்டுமின்றி, நாட்டு மக்களை கதர் வாங்க ஊக்குவித்தார். இதன் விளைவாக, காந்தி ஜெயந்தி அன்று, தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள கதர் பவனில் கதர் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடந்த 3 ஆண்டு கால விற்பனை புள்ளிவிவரங்கள்படி , ஒவ்வொரு ஆண்டும் விற்பனை காந்தி ஜெயந்தி தினத்தன்று ரூ.1 கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை ரூ.1.5 கோடியாக உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.1.01 கோடியாக இருந்த கதர் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை, 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.1.34 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் என்பதை தெளிவுபடுத்துகின்றன