“நமக்கு எதிராக அவதூறுகளையும் பொய்களையும் பரப்ப ஒரு சிறு நரி கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது-ஸ்டாலின்

0
170
ஸ்டாலின்

ராமநாதபுரத்தில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் “நமக்கு எதிராக அவதூறுகளையும் பொய்களையும் பரப்ப ஒரு சிறு நரி கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. நாம் திரும்பத் திரும்ப திட்டங்களைப் பற்றி பேசுவோம். இதில் எதிரிகள் பரப்புகின்ற அவதூறுகள் சுக்கு நூறாக உடைந்திடும்” என்று பேசினார்.

தி.மு.க.வின் தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்  ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “வீரமிகுந்த இந்த ராமநாதபுரம் மண்ணில் தீரர்களான நாம் கூடியிருக்கிறோம். சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு, இறையியல் வளர்ச்சிக்கும் ஆற்றிய தொண்டை காலத்தால் அழிக்க முடியாதது, மறக்க முடியாதது. இந்த மண்ணை காக்கும் பெரும் போரில், 12 வயதான சேதுபதி மன்னர் ஈடுபட்டார். தன்னாட்சி பெற்ற நாடாக இருந்த இந்த சேது சீமையின் உரிமைகளைப் பறித்தவர்களையும் தன்னை திருச்சி சிறையில் அடைத்தவர்களையும் பழிவாங்க சேது மன்னர் திட்டமிட்டார்.

அவர் சிறையில் இருந்தபடியே மக்கள் எழுச்சி பெறவைத்தார். மன்னருடைய கட்டளையை மனதில் வைத்து மக்கள் ஒரு பெரும் போரையே நடத்தினார்கள். ஒருநாள் அல்ல இரண்டு நாள் அல்ல 42 நாட்கள் விடாமல் அந்த பெரும்போரை செய்தார்கள். திருச்சியில் இருந்தால் அவரை ஒவ்வொருத்தராக வந்து பார்ப்பார்கள் என்பதால், சென்னையில், செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு இழுத்துக்கொண்டு போய் தனிமைச் சிறையில் அடைத்து வைத்தது பிரிட்டிஷ் அரசு. 14 வருடம் தனிமைச் சிறையிலேயே இருந்து மரணமடைந்தார். எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டார் சேது மன்னர்.

இந்த நிலையில் தான் சேதுபதி மன்னரை பெருமைப்படுத்தக் கூடிய வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு சேதுபதி நகர் என்று பெயர் சூட்டியவர்தான், நம் நெஞ்சில் வாழக்கூடிய தமிழகத் தலைவர் டாக்டர் கலைஞர். அப்படிப்பட்ட இந்த சேது சீமைக்கு ஏராளமான நன்மைகளை செய்த ஆட்சி நம்முடைய தி.மு.க ஆட்சி.

தமிழ்நாட்டை தி.மு.க மீண்டும் ஆள வேண்டும் என கலைஞர் கனவு கண்டார். அந்த கனவை நிறைவேற்றி விட்டோம். தமிழ்நாட்டை தி.மு.க தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்று கலைஞர் கனவு கண்டார். அந்த கனவையும் நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டுவோம். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்தியா முழுமையாக பரப்ப வேண்டும் என்பது நம்முடைய கலைஞரின் கனவு. தமிழ்நாட்டின் சீர்திருத்தச் சட்டங்கள் இந்தியாவின் சட்டங்களாக மாற வேண்டும் என கலைஞர் நினைத்தார். அந்த கனவையும் நாம் நிறைவேற்றிக் காட்ட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான மாநாடு தான் இது. அதற்கான தளபதிகள் தான் நீங்கள்.

நாடாளுமன்ற வெற்றிக்கும் நீங்கள்தான் பொறுப்பாளர். ‘நாற்பதும் நமதே நாடும் நமதே’ என்று நான் சொல்வது உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் தான். இன்று முதல் தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் என்று கம்பீரத்துடன் கடமையாற்ற வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது இலக்காக அமைய வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. அதில் வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது தான் முதல் பணி. இரண்டாவது பணி வாக்காளர்களுக்கான விவரங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா; போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா; இறந்தவர்கள் பெயரை நீக்கியாச்சா என முழுமையாக சரி பார்க்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரத்தை பூத் வேலைக்காக ஒதுக்குங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உங்களால் ஒதுக்க முடியாதா?. அரசு திட்டங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

நமக்கு எதிராக அவதூறுகளையும் பொய்களையும் பரப்ப ஒரு சிறு நரி கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் ரொம்ப குறைவு. அவர்கள் பொய்யே சொல்லிக் கொண்டிருக்கட்டும். நாம் திரும்பத் திரும்ப திட்டங்களைப் பற்றி பேசுவோம். இதில் எதிரிகள் பரப்புகின்ற அவதூறுகள் சுக்கு நூறாக உடைந்திடும்” என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here