சென்னை: சென்னை மெட்ரோ பணிகள் தீவிரமாக பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. இரண்டாம் கட்ட பணிகள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில், முக்கியமான சில மெட்ரோ நிலையங்களை அமைக்க டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி டாடா நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிறுவனம் ரூபாய் 1,204. 87 கோடி வழங்கியுள்ளது. ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ், கெல்லிஸ் உள்ளிட்ட 4 இடங்களில்
ரயில் நிலையங்கள் கட்ட டாடா திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இங்கே பூமிக்கு கீழே மெட்ரோ பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தரையோடு தரையாக இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் இங்கே அமைக்கப்பட உள்ளன.
மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் உள்ள பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் உள்ளிட்ட நான்கு நிலையங்களுக்கான ஒப்பந்தம் கடந்த வாரம் தினேஷ்சந்திரா-சோமா நிறுவனத்திற்கு ₹1,063.37 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டாடா நிறுவனத்திற்கு அடுத்த கட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன. முன்னதாக இதற்கான ஏற்பு கடிதம் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு 02.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் நிலையம் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பால்பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை (மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ) ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
நீலகிரி ராட்சசன்:
இந்த நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. அதன்படி மாதவரம் ஹைரோட்டில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின் 3-வது நடைபாதையில் நேற்று முழுமையாக டன்னல் உருவாக்கப்பட்டது. நீலகிரி (S-96) என பெயரிடப்பட்ட டன்னல் போரிங் மெஷின் (டிபிஎம்) இங்கே முழுமையாக பாதையை துளைத்து உருவாக்கி சாதனை செய்தது. சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த துளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாதவரம் மில்க் காலனி ஸ்டேஷனில் இருந்து மாதவரம் ஹைரோடு வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நீலகிரி போரிங் மெஸின் பணிகள் முதல்கட்டமாக முடிவடைந்து உள்ளது.
மெட்ரோ அதிகாரிகள் இடையே இது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளில் இது மிக முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் மூலம் இந்த பணிகள் இங்கே 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. அதில் தற்போது ஒன்றரை கிலோ மீட்டர் பணிகள் முடிந்து உள்ளன.
இந்த பாதை முழுக்க அதிக பாறைகள், கற்கள் உள்ள இடம் ஆகும். அதனால் இங்கே துளைத்து பாதை அமைப்பது என்பது மிகவும் கடினமான பணி ஆகும்.
ஏன் கடினம்:
டாடா நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ள குறிப்பிட்ட பாதையில் மெட்ரோ அமைப்பது மிகவும் கடினம் என்று மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொளத்தூர் மற்றும் நாதமுனி இடையே நிலத்திற்கு அடியே மெட்ரோ பாதை அமைக்க டாடா ப்ராஜெக்ட்ஸ் மிகக் குறைந்த விலையில் ஏலம் எடுத்துள்ளது. 5.8 கி.மீ தூரம் கொண்ட இந்த பாதை முழுக்க மிகப்பெரிய மெகா பாறைகள், கற்கள் மட்டுமே உள்ளன. இதனால் இதை குடைவது மிகவும் கடினம். இந்த பகுதிக்கு டாடாவின் மிஷின்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. பாறை மண் காரணமாக இங்கே பணிகளை முடிக்க 3 ஆண்டுகள் ஆகும். மாதவரம் & சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் உள்ள முக்கியப் பாதையில் சீனிவாச நகர், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் எம்டிஎச் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் நிறுத்தங்கள்
அமைக்கப்படும் என்று மெட்ரோ தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் நடக்கும் மெட்ரோ பணிகள் சென்னையில் செய்யப்பட்ட மெட்ரோ பணிகளில் மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.