சென்னை: நேற்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட பல்வேறு மசோதாக்கள் வாக்கெடுப்புகளில் மொத்தமாக அதிமுக பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. அதிமுகவின் நிலைப்பாடு நேற்று தேசிய அளவில் கவனிக்கப்பட்டது.
நடாளுமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இரண்டு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் புயலை கிளப்பி உள்ளது. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள் முன் பரேட் போல கொண்டு சென்று உள்ளனர். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற அவமானகரமான விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் வரலாறு முழுக்க பதிவாகும் அளவிற்கு மக்கள் மனதை பாதித்து உள்ளது. அதில், நடுரோட்டில் இருந்து பொட்டை காடு ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கே இந்த பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆண்கள் அங்கே இருக்க. பல ஆண்கள் இரண்டு பெண்களையும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தையே உலுக்கி உள்ளது. இதற்கு இடையில் நாடாளுமன்றத்தில் சில விவாதங்களை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய மசோதாக்களும் கூட நிறைவேற்றப்பட்டன. அதன்படி மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள Digital Personal Data Protection (DPDP) எனப்படும் டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா (டிபிடிபி) பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த டிபிடிபி மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தின் மக்களவையில் இந்த மசோதா மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் அதிமுகவிற்கு இருக்கும் ஒரு எம்.பியும் இந்த குரல் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளார்.
அதே சமயம் திமுக, காங்கிரஸ் ஆகியவை மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்தன. மசோதா மீது விவாதம் நடத்தப்படவில்லை என்பதால் திமுகவால் இதை எதிர்த்து கருத்து சொல்ல முடியாத நிலை ஏற்பட்டாலும், குரல் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்து, எதிர்ப்பை பதிவு செய்தனர்.
டெல்லி மசோதா:
இன்னொரு பக்கம் டெல்லி யூனியன் பிரதேச நிர்வாக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. டெல்லி நாட்டின் யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. எனினும், உச்ச நீதிமன்றம் உத்தரவு வெளியான உடனேயே, இந்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த நிலையில்தான் அதன் மசோதா முன்பு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு ஜனநாயகத்திற்கு விரோதமானது.
நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று திமுக எம்பி சிவா பேசினார். அதே சமயம் இந்த மசோதாவிற்கும் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
அமித்ஷா-விற்காக:
டெல்லி நிர்வாக திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசியது தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. இது அமித் ஷா கொண்டு வந்த மசோதா அமித் ஷாக்காக இதை ஆதரிக்குறோம், என்று வெளிப்படையாக கூறி பாஜக மனதை அதிமுக குளிர வைத்தது. அவரின் பேச்சும்,
அதிமுகவின் பாஜக ஆதரவு நிலைப்பாடும் நேற்று தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுகவின் ஆதரவு இல்லை என்றால் ராஜ்ய சபாவில் நேற்று இந்த மசோதா வெற்றி பெற்று இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.