கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருண்குமார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 10 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார். இந்நிலையில் தான் எம்எல்ஏ அருண் குமார் மகனின் திருமண வரவேற்பு இன்று கோவை மாவட்டம் காளப்பட்டியில் நடந்தது. இதில் பங்கேற்க வேண்டும் என அவர் அனைத்து அதிமுக தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி இருந்தார்.
இதையடுத்து இன்று ஏராளமான அதிமுக தலைவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்றார். இதையடுத்து அங்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். எடப்பாடி பழனிச்சாமியை பார்த்த தொண்டர்கள் சிலர் அவருடன் செல்பி எடுக்க தயாராக இருந்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி நடந்து செல்லும் வழியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பாக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அருண் குமார் நடந்து சென்றார். அந்த சமயத்தில் கையில் செல்போனை உயர்த்தி பிடித்தபடி தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் செல்பி எடுக்க முயன்றார். இதை பார்த்த அருண் குமார் எம்எல்ஏ அவரது செல்போனை திடீரென பறித்தார்.
அதன்பிறகு செல்பி எடுக்க வேண்டாம் என தொண்டரிடம் கூறிய அருண்குமார் எம்எல்ஏ செல்போனை அவரிடம் வழங்கினார். இதற்கிடையே தொண்டரிடம் அருண் குமார் எம்எல்ஏ செல்போனை பறித்ததை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.