மும்பை: மகாராஷ்டிராவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக சிவசேனா (ஷிண்டே) எம்.எல்.ஏவிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை அவரது ஆதரவாளர் நடு ரோட்டில் கொடூரமாக தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் உள்ள பசோரோ பகுதியில் இருந்து வெளியாகி இருக்கும் காட்சி ஒன்று
வெளியாகி அம்மாநில அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
ஸ்கூட்டரில் செல்லும் மஞ்சள் டீ சர்ட் அணிந்திருந்த நபரை வழிமறித்து வண்டியில் இருந்து கீழே தள்ளி விடும் ஒரு கும்பல் அவரை கொடூரமாக தாக்குகிறது. கைகளால் அடித்தும், கால்களால் மிதித்தும் அவர் தாக்கப்படும் காட்சியை வீடியோ எடுத்து யாரோ சமூக வலைதளங்களில் வெளியிட தற்போது அது பூதாகரமாகி இருக்கிறது. தாக்கப்படும் நபர் வேறு யாருமல்ல. மக்களின் குரலாக ஒலிக்கும் பத்திரிகையாளர். அவர் பெயர் சந்தீப் மகாஜன். இணைய ஊடகம் ஒன்றில் பணிபுரியும் இவர் தாக்கப்படுவதற்கான காரணம், தன்னுடைய கடமையை சரியாத செய்ததால்தான். அப்படியென்ன செய்துவிட்டார் அந்த பத்திரிகையாளர்? மகாராஷ்டிராவையே அதிர வைத்து 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக எம்.எல்.ஏவிடம் கேள்வி எழுப்பியது குற்றமாம். அதற்காக அவரது ஆதரவாளர்கள், அடியாட்கள் இப்படி கொடூரமாக எம்.எல்.ஏவை தாக்கி உள்ளார்கள்.
அவர் கேள்வி எழுப்பியது ஆளும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ. கிஷோர் பாட்டிலிடம். இது பற்றி கேள்வி எழுப்பியதற்காக சட்டமன்ற உறுப்பினரிடம் போன் மூலமாகவும் எம்.எல்.ஏ. பத்திரிகையாளர் சந்தீபை மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவரது ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தி சென்று உள்ளார்கள். கும்பல் தாக்குதலில் ஈடுபடும்போது தன்னை பாதுகாக்க பத்திரிகையாளர் எவ்வளவோ முடிந்தும், தொடர்ந்து விழுந்த அடியால் அவர் சாலையில் சுருண்டு படுத்துக்கொண்டார். ஒரு சிலர் இதனை கண்டும் காணாமல் கடந்து சென்ற நிலையில், வேறு சிலர் துணிச்சலாக வந்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை விரட்டியது. இதனால் பத்திரிகையாளரை சாலையிலேயே போட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றார்கள். காயமடைந்த பத்திரிகையாளர் சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதலுக்கு மகாராஷ்டிரா பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. தாக்குதலுக்கு மூலக் காரணமான எம்.எல்.ஏ. கிஷோர் பாட்டில் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் வலியுறுத்தி உள்ளார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய இளைஞரணி தலைவர் பிவி ஸ்ரீநிவாஸ் தெரிவிக்கையில், “பத்திரிகையாளர் சந்தீப் மகாஜன் மகாராஷ்டிராவில் நடுரோட்டில் தாக்கப்படுகிறார். இவர் செய்த தவறு 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக
எம்.எல்.ஏ மற்றும் முதலமைச்சர் நீதி கோரியதுதான்.” என்றார்.