அன்புமணி ராமதாஸ் உட்பட கைது செய்த பாமக-வினரை போலீஸ் விடுவிப்பு.!

0
94
அன்புமணி ராமதாஸ்

என்எல்சி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்ய வந்த காவல்துறை வாகனம் தாக்கப்பட்ட நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம், வளையமாதேவி பகுதியில் விளைநிலங்களில் புகுந்து நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமக கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

என்.எல்.சி 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளை கைவிட வலியுறுத்தி இன்று நடைபெற்று வரும் முற்றுகை போராட்டத்தின் போது என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக பாமகவினர் முழக்கங்களை எழுப்பினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்துப் பேசினார்.

தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டுவிட்டு மறுபுறம் விவசாயத்தை அழித்து வருவதாகவும், நெல் வயல்கள் அழிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் பதில் கூற வேண்டும் என்றும், கடலூர் மாவட்டத்தை அழிக்கும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் என்.எல்.சி நிறுவனத்திற்குள் நுழைவுவதற்காகப் புறப்பட்டனர். என்.எல்.சி நுழைவாயில் நோக்கி புறப்பட்ட பா.மகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் உருவானது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்ககன பாமகவினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸை கைது செய்து ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பாமகவினரை, காவல்துறையினர் தடியடி நடத்தி களைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் கல் வீசி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் உள்பட கைது செய்யப்பட்டிருந்த பாமகவினர் விடுவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here