சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஹாரன் அடித்த வேன் ஓட்டுனரை கார் ஓட்டுநர் ஒருவர் வழிமறித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் சூலூர், ரங்கநாதபுரம் பிரிவு அருகே தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் திருச்சி சாலையில் காங்கேயம் பாளையம் நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. பணி முடிந்ததும் வீடு செல்லும் ஊழியர்களை குறித்த நேரத்தில் இறக்கி விட வேண்டும் என்பதற்காக ஓட்டுநர் யுவராஜ் என்பவர் வேனை அதிவேகமாக இயக்கியதாக தெரிகிறது.
அப்போது முன்னே சென்று கொண்டிருந்த காரை ஓவர் டேக் செய்வதற்காக தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரை ஓட்டி வந்த ராசி பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் வேனை வழிமறித்து, காரில் இருந்து இறங்கி வந்து வேன் ஓட்டுநர் யுவராஜை தாக்கியுள்ளார்.
சற்றும் எதிர்பாராத திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த வேன் ஓட்டுநர் யுவராஜ் பலத்த காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக சரவணகுமாரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் கார் ஓட்டுநர் மற்றும் வேன் ஓட்டுநரை யுவராஜை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ஹாரன் அடித்ததால் வேன் ஓட்டுனரை சக வாகன ஓட்டி ஒருவர் தாக்கிய தாக்கிய வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.