குரூப் 4 தேர்வு முடிவுகளில் குளறுபடி- பாஜக கண்டனம்

0
98
Annamalai

ஆட்சிக்கு வந்தவுடன் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் கூட அலட்சியப் போக்கைக் கையாள்வது அவமானகரமானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “
சுமார் 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள் இதோ அதோ என்று இழுத்தடித்த பின், எட்டு மாதத்திற்குப் பிறகு வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 2 தேர்வில், கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது என்றும், இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றும் தேர்வாணையம் விளக்கமளித்திருந்தது.

Annamalai

தற்போது வெளியாகியிருக்கும் குரூப் 4 தேர்வு முடிவுகளில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது.

தேர்வு எழுதியவர்களில் சுமார் 30% தேர்வாளர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்பதும் அதனால் அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பதும் அத்தனை எளிதாகக் கடந்து செல்லும் விஷயமில்லை. மேலும், தேர்வு முடிவுகளில் தரவரிசை வெளியிடப்படவில்லை என்ற செய்தியும் வந்திருக்கிறது.

Annamalai

அது மட்டுமல்லாது, குரூப் 4 தேர்வு முடிவுகளில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தென்காசியில், ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்தப் பயிற்சி நிறுவனம் விளம்பரப்படுத்தியிருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தேர்வாளர்கள், தென்காசி தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

சில நாள்களுக்கு முன்னால் வெளியான, மாநிலம் முழுவதும் சுமார் 1000 காலி இடங்களுக்கான நில அளவர்/வரைவாளர் தேர்வில், காரைக்குடி தேர்வு மையத்திலிருந்து மட்டுமே 700 பேர் தேர்ச்சி பெற்றதாக செய்தி வந்தது. ‘தேர்வாணையம் இது குறித்து விசாரணை நடத்தும்’ என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அது போன்றே நடந்திருப்பது, அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் பல ஆண்டு கால உழைப்பையும், கனவையும் தகர்த்திருக்கிறது.

Annamalai

பல லட்சம் இளைஞர்கள் அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் நிலையில்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு, முழுநேரத் தலைவரை நியமிக்காமல் பொறுப்பற்று இருக்கிறது திறனற்ற திமுக அரசு. ஏற்கனவே 2006 – 2011 திமுக ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த திரு. கே.என்.நேரு, திரு. அந்தியூர் செல்வராஜ், மறைந்த திரு. வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாகச் செய்திகள் வந்த நிலையில், தற்போதும் அது போல நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளில் நடைபெற்று வரும் இது போன்ற குழப்பங்களால், அரசுப் பணித் தேர்வுகள் மீது, இளைஞர்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கியிருக்கின்றனர். அரசுப் பணி எனும் கனவிற்காக கடுமையாக உழைக்கும் பல லட்சம் இளைஞர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் ஏமாற்றத்தில் தள்ள வேண்டாம் என்றும் உடனடியாக திமுக அரசு இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால், உடனடியாக தேர்வு முடிவுகளை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மேலும் இது போன்ற தவறுகள் நடக்காதவாறு, தவறு செய்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்வு முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here