பஹட்டர் ஹூரைன் படத்தின் ட்ரெய்லர் விவகாரம் குறித்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “பஹட்டர் ஹூரைன் (72 ஹூரைன்)” என்ற தலைப்பிலான திரைப்படம் மற்றும் அதன் டிரெய்லருக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றிதழ் மறுக்கப்பட்டதாக சில ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஊடகச் செய்திகளுக்கு மாறாக, “பஹட்டர் ஹூரைன் (72 ஹூரைன்)” படத்திற்கு 4-10-2019 அன்று ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போது,19-6-2023 அன்று விண்ணப்பிக்கப்பட்ட அந்தப் படத்தின் டிரெய்லர் பரிசீலனையில் உள்ளது. 1952 சினிமாட்டோகிராஃப் சட்டம் பிரிவு 5பி(2)ன் வழிகாட்டுதல்கள்படி ஆய்வு செய்யப்பட்டது என்று சிபிஎப்சி தெளிவுபடுத்தியுள்ளது.
விண்ணப்பதாரரிடம் தேவையான ஆவணங்கள் கேட்கப்பட்டன. அவற்றைப் பெற்றதும், மாற்றங்களுக்கு உட்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. மாற்றங்கள் தொடர்பாக விளக்கம் கோரும் நோட்டிஸ் 27-6-2023 அன்று விண்ணப்பதாரர்/திரைப்படத் தயாரிப்பாளருக்கு அனுப்பப்பட்டது. அது விண்ணப்பதாரரின் பதில் அல்லது இணக்கத்திற்காக நிலுவையில் உள்ளது என்றும் சிபிஎப்சி தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளதால், இனிமேல் தவறான செய்திகளை வெளியிடவோ அல்லது பரவலாக்கவோ கூடாது என்று வாரியம் வலியுறுத்தியுள்ளது.