மதுரையில் வருகிற 15-ந் தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடக்கிறது. இது தொடர்பான கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சித்தாபுதூரில் உள்ள ம.தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. இதில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சனாதனம் கலாசாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. வட நாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து திராவிட இயக்கங்கள் இந்துகளுக்கு எதிரி போல சித்தரித்து வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்பவும் இதை செய்கிறார்கள். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்க பார்க்கிறார்கள். அன்பே சிவம் என்பது தான் இந்து மதம். ஆனால் அயோத்தியில் உள்ள ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்கு விலை பேசி ஒரு தலிபான் போல செயல்பட்டு உள்ளார். உதயநிதி பேச்சை திரித்து இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்று பவர்களுக்கும் தி.மு.க, மற்றும் இந்தியா கூட்டணியினர் எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.
இந்த பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பேசி உள்ளனர். தி.மு.க. ஆட்சி குறித்து எங்களுக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி மீது குறை சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியப்படாது. இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க இதை கொண்டு வருகிறார்கள். மின் கட்டண உயர்விற்கு மாநில அரசுகள் காரணம் அல்ல. மத்திய அரசு தான் காரணம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.