கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது திருப்பாலப்பந்தல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூலி தொழிலாளியான குருமூர்த்தி ஜெகதீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இரண்டு வயதில் திருமூர்த்தி எனும் ஆண் குழந்தையும் ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. குருமூர்த்திக்கும் அவரது தம்பி ராஜேஷுக்கும் கடந்த சில ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருமூர்த்தியின் மனைவி ஜெகதீஸ்வரி உடன் ராஜேஷுக்கும் இடையே சொத்துக் குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ராஜேஷ் கடந்த 17ஆம் தேதி மாலை வீட்டின் முன்பு தனியாக விளையாடிக் கொண்டிருந்த அண்ணன் குருமூர்த்தியின் இரண்டு வயது மகன் திருமூர்த்தியை யாரும் பார்க்காத நேரம் பார்த்து தமது அறைக்கு அழைத்துச் சென்று கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும் அரையில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸினை கழட்டி அதனுள் அடைத்து வைத்து உள்ளான். பின்னர் மாலை வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என அண்ணனுடன் சேர்ந்து கொண்டு அக்கம் பக்கத்தில் தேடி நாடகம் ஆடியுள்ளான் ராஜேஷ். திருப்பால பந்தல் காவல் நிலையத்தில் 17ஆம் தேதி மாலை குழந்தையின் தகப்பனார் குருமூர்த்தி மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதில் வழக்கு பதிவு செய்த திருப்பாலப்பந்தல் போலீசார் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சிசிடிவி காட்சி உள்ளிட்டவைகளை கைப்பற்றி விசாரணையை தீவிர படுத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை ராஜேஷின் அரையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. முதலில் அது பூனை இறந்துள்ளதாக கூறி மழுப்பிய உள்ளான் ராஜேஷ். இதனை அடுத்து சந்தேகம் அடைந்த குருமூர்த்தி ராஜேஷின் அறைக்குள் அவர் இல்லாத நேரம் பார்த்து சோதனை செய்துள்ளார்.
அப்போது ஸ்பீக்கர் பாக்ஸிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. அதனை திறந்து பார்த்தபோது காணாமல் போன இரண்டு வயது தனது மகன் சடலமாக அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து திருப்பாலப்பந்தல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ராஜேஷ் தேடிவந்த போலீசார் அருகாமையில் இருந்த டாஸ்மாக்கில் குடித்துக் கொண்டிருந்தபோது அவனை பிடித்து திருக்கோவிலூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவனிடம் திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் சொத்து தகராறில் குழந்தையை கொலை செய்து ஸ்பீக்கர் பாக்ஸில் அடைத்து வைத்துவிட்டு காணாமல் போனது போல தானும் சேர்ந்து தேடியதை நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டு உள்ளார். இதனை அடுத்து திருப்பாலை பந்தல் போலீசார் காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கை மாற்றி கொலை வழக்காக பதிவு செய்து ராஜேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சொத்து தகராறில் குழந்தையின் சித்தப்பாவே குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து ஸ்பீக்கர் பாக்ஸில் அடைத்து நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.