பிரதமர் நரேந்திர மோடி வீடு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடலாம் வாங்க என நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நடத்திய போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அழைப்பு விடுத்தார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2016 ஆம் ஆண்டு நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு அலை நீடித்து வருகிறது. இதற்கு எதிராக தொடர்ந்து தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அரசியல் குரல் கொடுத்து வருகின்றன. ஆனாலு, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவை பல மாதகால இழுபறிக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஆனால்,இதுவரை இதற்கு விலக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பெற்றோர் நீட் தேர்வுக்கு தடை விதிக்க வலியுறுத்தியது பெற்றோர்கள் பேசினர்.
நீட் தேர்வுக்கு தடை கிடையாது என்று ஆளுநர் பதிலளித்ததும், நீட்டுக்கு எதிராக பேசியவரின் மைக்கை பிடுங்க முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே கடந்த வாரம் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவ சீட் கிடைக்காத காரணத்தால் ஜெகதீஸ்வரன் என்ற சென்னையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
மகனை இழந்த துயரம் தாங்க முடியாமல் அவரது தந்தையும் மறுநாள் தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாட்டையே உலுக்கி இருக்கிறது. தற்கொலை செய்து கொண்ட ஜெகதீஸ்வரனின் நண்பரும் மருத்துவ மாணவருமான ஃபயாசுத்தீன் செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு ஆவேசமாக பேசியது நீட் தேர்வு தொடர்பான விவாதத்தை மேலும் வலுப்படுத்தியது.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.அப்போது அனிதா பற்றிய ஒரு காணொளி ஒளிபரப்பப்பட்டது அதனை கண்ட உதயநிதி கண்ணீர் விட்டார்.
அப்போது பேசிய அவர் நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக உரையாற்றினார். “நீட் தேர்வால் ஏற்பட்ட மரணம் எல்லாம் தற்கொலை இல்லை. 21 பேரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. நீட் மரணம் அனைத்துமே கொலை: இதை செய்தது பாஜக அரசு. அதற்கு அடிமை அதிமுக எடப்பாடி அரசு உறுதுணையாக இருந்தது.
போராடத்தில் ஈடுபட்டால் அமைச்சர் பதவி பறிக்கப்படும், தகுதி நீக்கம் செய்வார்கள் என்று அதிமுகவினர் கூறினார்கள். எங்களுக்கு எதிராக அதிமுகவினர் புகாரும் அளித்து உள்ளனர். எனது அமைச்சர் பதவி போனால் கூட பரவாயில்லை. நீட்டை எதிர்த்து நான் போராடுவேன். ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய அம்மாசியப்பனுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். ஆளுநரை கேள்வி கேட்டால் மிரட்டுவார்களா? நாங்கள் அம்மாசியப்பனுக்கு பாதுகாப்பு கொடுப்போம்.. உங்களால் என்ன செய்ய முடியும். மோடியும், அமித்ஷாவும் பிசைந்து வைத்த களிமண்தான் அதிமுக.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். அதிமுக பொதுச் செயலாளர் அல்லது அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் மோடி வீடு முன் போராட்டத்தில் ஈடுபட வருவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.