பெரியகுளம் நகராட்சி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பேரிஜம் ஏரியில் படகுசவாரி விடும் திட்டத்தை ரத்து செய்ய தி.மு.க. அரசை வலியுறுத்திக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாசுக்களின் தொல்லை மூலம் சுற்றுப்புறச் சூழ்நிலை ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலையில், உயிர்கள் வாழ இன்றியமையாததாகிய காற்றிலும், நீரிலும் மாசுக்கள் கலக்காதவாறு காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு. தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுத் தண்ணீர் நதிகளிலும், ஆறுகளிலும் கலப்பதன் காரணமாக இயற்கைத் தன்மை சிதைந்து நச்சாக மாறுவதோடு உயிரினங்களும் இறந்துவிடுகின்றன. இதன் காரணமாக மாசுபடிந்த தண்ணீரை குடிக்கக்கூடிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் படகு விடுவதற்கு வனத் துறை தீர்மானித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது தண்ணீர் மாசுபடுவதை ஊக்குவிக்கும் செயல்.
1926 ஆம் ஆண்டு முதலே கொடைக்கானல் வனப் பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் மதிகெட்டான் சோலை, அலங்காரம், சொக்கன்அலை, கண்ணக்கரை வழியாக 28 கிலோ மீட்டர் வனப் பகுதியில் பயணித்து சோத்துப்பாறை அணையை அடைந்து, அங்கிருந்து பெரியகுளம் மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு மூன்று கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், இதன் சாவி பெரியகுளம் நகராட்சி வசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டத்தின்மூலம் இலட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக பேரிஜம் அணை விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் தூய்மையான தண்ணீரை பருகிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியகுளம் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில், சுற்றுலா என்ற போர்வையில் பேரிஜம் அணையில் படகு விட தமிழ்நாடு அரசின் வனத் துறை அனுமதித்திருப்பது வேதனையளிக்கும் செயல். காற்று மாசு, தண்ணீர் மாசு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய வனத் துறையே இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது கடும் கண்டனத்திற்குரியது. பேரிஜம் ஏரியில் படகு சவாரி விட்டால், சுற்றுலாப் பயணிகளால் அங்கு வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் நன்னீருடன் கலந்து, பொதுமக்களின் உணவாக அமையும் தண்ணீரை கெடுத்து விடும். பேரிஜம் ஏரியில் படகு சவாரி விடக்கூடாது என்று பெரியகுளம் நகராட்சி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெரியகுளம் நகராட்சித் தலைவரும் கொடைக்கானல் வனத் துறை அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெரியகுளம் நகராட்சி மற்றும் சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின்மூலம் பயன்பெறும் மக்களின் கோரிக்கையினை ஏற்று, பேரிஜம் ஏரியில் படகு சவாரி விடப்படுவதை ரத்து செய்ய வனத் துறைக்கு உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.