- சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ரயில் சேவை இயக்கப்படுகிறது. ஆனால் ரயில்கள் கடற்கரையில் இருந்து இயக்கப்பட்டாலும், வேளச்சேரியில் இருந்து வரும் ரயில்களும் சரி, கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரயில்களும் சரி, சென்னை பார்க் டவுன் ரயில் நிலையத்தில் (சென்ட்ரல்) தற்காலிகமாக நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை – எழும்பூர்- தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடம் தான் சென்னையின் மிகமிக முக்கியமான மின்சார வழித்தடம் ஆகும். தாம்பரம் செல்லும் மின்சார ரயில் எப்போது நின்றாலும், அன்றைய நாளில் சென்னை மொத்தமாக ஸ்தம்பத்துவிடும். அதிமுக்கியத்துவம் வாய்ந்த் இந்த வழித்தடத்தில் எழும்பூர் முதல் தாம்பரம் வரை 4 வழித்தடம் உள்ளது. அதேபோல் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 3 வழித்தடம் உள்ளது. இதேபோல் எழும்பூர் முதல் கடற்கரை வரை 3 வழித்தடங்களே உள்ளன.
எழும்பூர் மற்றும் கடற்கரை இடையே 3 வழித்தடங்களில் 2 வழித்தடங்களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும், அப்போது தான் வடமாநில ரயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க முடியும் என்ற நிலையும் இருந்தது. இதையடுத்து எழும்பூரில் இருந்து சென்னை கடற்கரை இடையே 4.5 கி.மீ தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பீட்டில் 4-வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி 4-வது வழித்தடம் அமைக்கும் பணி ஆரம்பித்து. இதற்காக கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது 7 மாதங்களுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படியே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையில் மட்டுமே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது.
இதனிடையே கடற்கரை – தாம்பரம் வழித்தடத்திற்கு அடுத்தபடியாக சென்னையில் மிகமிக முக்கிய மின்சார ரயில் வழித்தடமான கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் முழுமையாக ரயில்கள் இயக்கப்படாததால் சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகின. ஏனெனில் இந்த வழித்தடத்தில்தான் சென்னை கோட்டை (தலைமை செயலகம்), சிந்தாதிரிப்பேட்டை (அரசின் ஓமந்தூரார் மருத்துவமனை), சேப்பாக்கம் (கிரிக்கெட் மைதானம்), திருவல்லிக்கேணி (மெரினா கடற்கரை), கலங்கரை விளக்கம் (டி.ஜி.பி. அலுவலகம், ராணிமேரி கல்லூரி), மயிலாப்பூர், தரமணி (ஐடி நிறுவனங்கள் மொத்தமாக அமைந்துள்ள பகுதி), வேளச்சேரி ஆகியவை உள்ளன. இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பறக்கும் மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது.
முன்னதாக120 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை துண்டிக்கப்பட்டபிறகு, வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை இடையே 80 மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தன. இன்று முதல் இருமார்க்கமாகவும் 90 ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. சில பணிகள் முடிந்தபிறகு, முழுமையாக ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
அதேநேரம் தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ரயில் சேவை இயக்கப்பட்டாலும், வேளச்சேரியில் இருந்து வரும் ரயில்களும் சரி, கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரயில்களும் சரி, சென்னை பார்க் டவுன் ரயில் நிலையத்தில் (சென்ட்ரல்) தற்காலிகமாக நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏனெனில் அங்கு பிளாட்பார்ம் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அங்கு சில பணிகள் பாக்கி உள்ளது. அந்த பணிகள் முடிந்த பின்னரே பார்க் டவுன் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/2nd-innings-begins-urgent-decision-against-iran-israel-decides-to-launch-second-phase-attack/
கடற்கரை – வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக வேளச்சேரி – கடற்கரை வரை காலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரயில்கள் இயக்கப்படுகிறது. பார்க் டவுனில் வேலை முடிந்த பின்னர் வழக்கம் போல் 60, 60 என 120 சேவைகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல் செல்லும் பயணிகள் கோட்டையில் இறங்கி மாறி திரும்பவும் தாம்பரம் வழித்தடத்தில் ஏறித்தான் பார்க் ரயில் நிலையத்தில் இறக்க முடியும்.