திருவனந்தபுரம்: ‘கேரளா’என இருக்கும் தங்கள் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான மாநிலம் எனில் அது கேரளாதான். அங்கு தமிழ்நாடு மாதிரி பெரும் தொழில் வளர்ச்சி இல்லை என்றாலும் கூட, தனிமனித வருமானம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் அம்மாநிலம் தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு ஆட்சி மொழியாக மலையாளம் இருக்கிறது. கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது.
மலையாளத்தில் இதற்கு ‘கேரளம்’ என்று பெயர். ஆனால் ஆங்கிலத்தில் கேரளா என்றுதான் அழைக்கப்படுகிறது. அதேபோல அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து இன்று அம்மாநில சட்டமன்றத்தில் இது தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார். அதன்படி இனி மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழியிலும்
கேரளாவை கேரளம் என்றுதான் அழைக்கப்பட வேண்டும். இதற்கான மாற்றத்தையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள சட்டப் பேரவையில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அது நிறைவேற்றப்பட்டது. இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய பினராயி, “மலையாளத்தில் நமது மாநிலத்தின் பெயர் கேரளம். கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் நாள் மொழிவாரியாக கேரளம் பிரிக்கப்பட்டது. இதே நாளில்தான் நம் ‘கேரளப்பிறவி’ தினத்தை கொண்டாடுகிறோம். மலையாளம் பேசும் மக்களுக்கு கேரளம் தேவை. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே எங்களின் தாய்மொழி வலுவாக இருந்தது.
ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை, ‘கேரளா’ என குறிப்பிடுகிறது. எனவே அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ் இந்த பெயரை ‘கேரளம்’ என திருத்தம் செய்ய
அவசர நடவடிக்கை தேவை” என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என்ற பயன்பாட்டை மாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ் புதிய மாநிலங்களையோ, ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள மாநிலங்களின் எல்லைகள் மற்றும் பெயரையோ மாற்றுவது குறித்து வழிகாட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.