வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படபாணியில் SI தேர்வில் நூதன முறையில் காப்பி தட்டித் தூக்கிய போலீஸ்

0
94
காவலர் தேர்வு

தமிழகத்தில் போலீஸ் துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதற்கு 1 லட்சத்து 45 ஆயிரத்தும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று சப் இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. தேர்வர்களுக்கு பலத்த சோதனை நடத்தப்பட்டது.

செல்போன் மற்றும் மின் சாதன பொருட்களை தேர்வர்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பெண் தேர்வர்களுக்கு பூ அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பிறகே தேர்வர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறையிலும் போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பின்னரும் ஒருவர் முக கவசத்தோடு ப்ளூ டூத் ஹெட்போனை பயன்படுத்தி தேர்வு எழுதிய சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. அதாவது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் தேர்வு எழுதும் போது ஹெட்போனை பயன்படுத்தி வெளியில் இருந்து ஒருவரிடம் பதிலை கேட்டு கேட்டு எழுதுவார்.

அதே பானியில தான் கிருஷ்ணகிரியில் வாலிபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாட்டிகொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அதியமான என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியிலும் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 3 ஆயிரத்து 559 தேர்வர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதில், காலையில் நடந்த, பொது அறிவு தாள் தேர்வினை தேர்வர்கள் மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது அறையில் இருந்து திடீரென ஒரு சத்தம் கேட்டது.

இதனால் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிந்த போலீசார் தேர்வர்கள் அனைவரையும் சோதனை செய்தனர். அப்போது, வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹெட்போனை பயன்படுத்தி பேராசிரியர் ஒருவரிடம் கேள்விகளுக்கான பதிலை கேட்டு எழுதுவது போல் ஒரு வாலிபர் முக கவசத்தோடு இணைக்கப்பட்டிருந்த ஹெட்போன் மூலம் உறவினர் ஒருவரிடம் இருந்து பதிலை கேட்டு எழுதி வந்துள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில், அந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்குஅவரது உறவினர் ராஜவேல் என்பவர் தான் வெளியில் இருந்து செல்போன் மூலம் தேர்வு எழுத உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜவேலும் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here