இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப். 15 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தது. அவரது கைது சட்டப்படி சரியானது என உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தது.
விசாரணை முடிந்து, கடந்த ஆக. 12-ஆம் தேதி அவரை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை ஆஜா்படுத்தியது. அவா் மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகை, 3,000 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, அவரது காவலை ஆக. 25 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை சென்னை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி . , எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் கடந்த ஆக.25-ஆம் தேதி முடிவடைந்ததையடுத்து, அவா் சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா்.
அவரது நீதிமன்றக் காவலை ஆக. 28 வரை நீட்டித்தும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்தவும் சிறைத் துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி திங்கள்கிழமை நேரில் ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப். 15 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே ஜாமீன் கோரியிருந்த நிலையில், இதை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது எனவும், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தை நாடவும் உத்தரவிட்டார். அடுத்த விசாரணைக்கு செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆஜராகலாம் என நீதிபதி கூறினார். முன்னதாக, அமலாக்கத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜியிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.