வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
வாரணாசியின் கஞ்சரியில் சுமார் ரூ.450 கோடி செலவில் 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நவீன சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட உள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, வாரணாசிக்கு மீண்டும் வருகை தரும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, இந்த நகரத்தின் மகிழ்ச்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் சந்திரயான் நிலவில் தரையிறங்கி சிவ சக்தி புள்ளியை கடந்த மாதம் 23 ஆம் தேதி அடைந்தது. சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, தான் காசிக்கு விஜயம் செய்வதாக பிரதமர் எடுத்துரைத்தார். “சிவ சக்தியின் ஒரு இடம் சந்திரனில் உள்ளது, மற்றொன்று காசியில் உள்ளது” என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முக்கியமான சாதனைக்காக அனைவரையும் வாழ்த்தினார்.
மாதா விந்தியவாசினிக்குச் செல்லும் பாதையின் சந்திப்பில் அமைந்துள்ள இந்த இடத்தின் முக்கியத்துவத்தையும், ராஜ் நாராயண் அவர்கள் வாழ்ந்த இடமான மோதிகோட் கிராமத்துடனான அதன்நெருக்கத்தையும் பிரதமர் குறிப்பிட்டார்.
மகாதேவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச அரங்கத்தின் வடிவமைப்பு காசி மக்கள் மத்தியில் ஒரு பெருமித உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார்.
இங்க கட்டமைக்கப்பட உள்ள மைதானம் சிறந்த கிரிக்கெட் போட்டிகளைக் காணும் என்றும், இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச தரத்துடன் கூடிய மைதானத்தில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். “இது காசி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்”, என்றும் அவர் கூறினார்.
கிரிக்கெட்டின் மூலம், உலகம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு வருவதாகவும், பல புதிய நாடுகள் கிரிக்கெட் விளையாடுவதால் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளுக்கு வழிவகுக்கிறது என்றும் பிரதமர் கூறினார். இந்த சர்வதேச ஸ்டேடியம் வரும் ஆண்டுகளில் அதிகரித்து வரும் மைதானங்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று அவர் கூறினார். பி.சி.சி.ஐ.யின் பங்களிப்புக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது விளையாட்டில் சாதகமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பிராந்திய பொருளாதாரத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இதுபோன்ற முன்னேற்றங்கள் அதிக அளவு சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கின்றன. எனவே இதுபோன்ற மைதானங்கள் ஹோட்டல்கள், உணவகங்கள், ரிக்ஷாக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் போன்றருக்கு பெரிதும் பயனளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த முயற்சி விளையாட்டு பயிற்சி மற்றும் மேலாண்மை நிறுவனங்களுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது, இளைஞர்கள் விளையாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கவும் வழிவகுக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். வரும் நாட்களில் வாரணாசியில் ஒரு புதிய விளையாட்டு மேம்பாடு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
பெற்றோர்கள் மத்தியில் விளையாட்டு குறித்த மாறிவரும் அணுகுமுறையை பிரதமர் எடுத்துரைத்தார்.