மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறியாகியில்,”மதுரை அரசு ராஜாஜி மருத்துவனை மற்றும் மதுரை மாவட்டட “மக்கள் நல்வாழ்வுத்துறை” சார்பில் நடைப்பெற்ற “உதிரம் 2023” என்ற குருதி கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட பொறியியல் கல்லூரி மாணவர் தினேஷ் அவர்கள் போட்டியின் முடிவில் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அப்போட்டியில் கலந்துகொண்ட, கள்ளக்குறிச்சி மாவட்டம், மேல்நாரியப்பனூர் கிராமம், முத்துகிருஷ்ணன் புதல்வர் தினேஷ் இறந்த செய்தி அமைச்சருக்கோ, அரசின் கவனத்திற்கோ செல்லாதது ஏன் என்று தெரியவில்லை. தமிழக அரசு உனடியாக இதுகுறித்து விசாரணை செய்து மாணவரின் பெற்றோரை அழைத்து பேசி அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
மாணவர் தினேஷ் காலமானது அவரது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல மாணவ சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். மாணவர் தினேஷின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணமும் அளிக்க வேண்டும்.
மாணவர் தினேஷ் இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.