டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகில் உள்ள எண்டோஸ்கோபி அறையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
காலை 11:54 மணிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து தீயணைப்பு அழைப்பு வந்ததை அடுத்து, அருகில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டது. அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சப்தர்ஜங் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இந்த தகவல் மருத்துவமனை வாயிலில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டது.
“தீ கட்டுக்குள் உள்ளது. இயக்குநரும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்துள்ளார்” என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
எண்டோஸ்கோபி அறை பழைய வெளிநோயாளர் பிரிவின் (OPD) இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது. பழைய ராஜ் குமாரி OPD கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்களால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, ஆனால் தேடுதல் பணி இன்னும் தொடர்கிறது” என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.