பேருந்து இல்லாமல், 10 கிலோமீட்டர் நடந்து செல்லும் அவலம்.
ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட சுற்றுவட்டார குக் கிராமங்களில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு, முறையான பேருந்து வசதி இல்லை. காலை நேரத்தில் அனைத்து வழித்தடத்திலும் ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது.
மேலும் பள்ளி முடிந்து வீடு திரும்ப மாலை நேர பேருந்துகள் முழுமையாக இல்லாததால், 10 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. இதனால் வீடு சென்று சேர இரவு எட்டு மணி, ஒன்பது மணி ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த அவல நிலையால் மாணவ மாணவிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். முறையான பேருந்து வசதி இல்லாததன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
![](https://www.thenewscollect.com/wp-content/uploads/2023/09/IMG_20230823_130223-1.jpg)
ஏரியூர் அருகே உள்ள சீலநாயக்கனூர் மணியக்காரன் கொட்டாய் சிடுவம்பட்டி புளியமரத்தூர் பழையூர் சாம்பள்ளி திருமணம் அல்லி மேட்டூர் கொட்டாய் ஊர் நத்தம் ஆலமரத்து கொட்டாய் தாளப்பள்ளம் புதுக்காடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மாணவ மாணவிகள், ஏரியூர் அரசு பள்ளியை நம்பி உள்ளனர். ஆனால் காலை நேரத்தில் ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது இதில் அதிக நெரிசலுடன் மாணவ மாணவிகள் பயணித்து வருகின்றனர் ஆனால் மாலை நேரத்தில் இவர்களுக்கு எவ்வித பேருந்து வசதியும் இல்லை இதன் காரணமாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அனைவரும் நடந்து செல்கின்றனர்.
ஏரியூர் அருகே உள்ள சீலநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள், நேற்று காலை நேரத்தில் வரும் அரசு பேருந்தை சிறை பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏரியூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். அடிக்கடி போராட்டங்கள் நடத்துவதும் போலீசார் வந்து, போராட்டத்தை கைவிட சொல்வதும் வழக்கமாக உள்ளது.
இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறியதாவது: தற்போது மாணவ மாணவிகளை வைத்து அடையாள சாலை மறியலில் ஈடுபட்டோம், விரைவில் மாலை நேர பேருந்துகள் இயக்கப்படாத பதபட்சத்தில், அனைத்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி, பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால், பென்னாகரம் முதுகம்பட்டி- ஏரியூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.