கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மாணவி ஸ்ரீமதியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி 1,362 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகளான கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரின் பெயர்களையும் வழக்கில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கம் செய்துள்ளனர்.
![](https://www.thenewscollect.com/wp-content/uploads/2023/09/36d5e6b3-5d0f-400c-ae8c-223f71d1d6e7.jpg)
இதுதொடர்பாக ஆட்சேபனை இருந்தால் கோர்ட்டில் ஆஜராகி தெரிவிக்குமாறு ஸ்ரீமதியின் தாய் செல்விக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே சம்மன் அனுப்பியது. இதற்காக செல்வி கேட்டுக்கொண்டதன்பேரில் அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரம் ஆகியவை கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியன்று கோர்ட்டு சார்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் அவரது வக்கீல்கள் கேசவன், லூசியா, கஜேந்திரன் ஆகியோர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகினர்.
அப்போது, இவ்வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணைக்குழு அமைக்கக்கோரி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் அதன் விசாரணை இன்னும் முடிவடையாததாலும், இவ்வழக்கு தொடர்பான ஆவணப்பட்டியலை சரிபார்க்க 2 மாதம் கால அவகாசம் வழங்கும்படியும் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, 2 மாத காலம் அவகாசம் வழங்கியதோடு மீண்டும் அக்டோபர் 20-ந் தேதிக்கு இவ்வழக்கை ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் மாணவியின் தாய் செல்வி நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.