திமுக விஞ்ஞான ஊழல் செய்யும் கட்சி.! வானதி சீனிவாசன் விமர்சனம்.!

0
97
வானதி சீனிவாசன் ஸ்டாலின்

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மீனவர் சமுதாய நலகூடத்தில், ஆயுஷ்மான் பாரத் சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனிநபர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில்  பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு நலத்திட்ட அட்டை வழங்குவதற்கான ஆன்லைன் பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இத்திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என்றார். இத்திட்டத்தால் மக்கள் பயன்பெற

வானதி ஸ்டாலின்

சுகாதார துறை அதிகாரிகள் உடன் இணைந்து, இன்று முதல் முகாம் துவங்கியுள்ளோம் என கூறிய அவர், இந்த முகாம்களை கோவை தெற்கு தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை அனைவருக்கும் கிடைக்க மாநில அரசு தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என்‌ மக்கள் பயணம் முதற்கட்டத்தை நிறைவு செய்து, அடுத்த கட்டமாக மேற்கு மண்டலத்திற்கு வர உள்ளது என கூறிய அவர்,

கோவையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இந்த யாத்திரை நடைபெறும் என்றார். அண்ணாமலையின் இந்த பயணம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இந்த யாத்திரை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற பிறகு பாஜக செயல்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது என்றார். இந்த பயணம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு உற்சாக, புத்துணர்வை அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பை எடுத்தால் மாமன்ற உறுப்பினர்கள் மிரட்டுகிறார்கள், போர்வெல் போட வசூல் செய்கிறார்கள், வீடு கட்ட தனியாக பணம் வசூல் செய்கிறார்கள் என குற்றம் சாட்டிய அவர், கோவை மாநகராட்சி பகுதிகளில் இலஞ்சம் கேட்டால், உதவி செய்ய ஹெல்ப் லைன் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். அதற்கான தொடர்பு எண் இரண்டு நாளில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வானதி

தேர்தலில் ஒரு கட்சி மற்றும் தலைவர் எங்கு போட்டியிடுவது என்பது அவர்களின் விருப்பம் என தெரிவித்த அவர்,பிரதமர் எங்கு போட்டியிடுகிறார் என்பதை கட்சி தலைமை அறிவிக்கும் என்றார். மேலும்திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்துவதை தவிர மற்ற வேலைகளை முதல்வர் செய்கிறார் என சாடினார். திமுக விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்யும் கட்சி என விமர்சித்தார். அப்பழுக்கற்ற பிரதமரை குறை சொல்ல திமுகவிற்கு தகுதியில்லை எனவும் பிரதமர் நேர்மையை விமர்சிக்க திமுகவிற்கு தகுதியில்லை எனவும் கூறினார்.

100 பேரில் 4 பேருக்கு தான் மகளிர் உரிமைத்தொகை வருகிறது, அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை கொடுக்க வேண்டும், அப்படி அறிவித்தால் நானே பூத்களில் அமர்ந்து அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வாங்கி தருகிறேன் என்றார். பாஜக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது டிசம்பர் மாதத்தில் தெரியும், அப்போது எத்தனை‌ புது நண்பர்கள் கிடைக்கிறார்கள் என்பதை பாருங்கள் எனவும் கூறினார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தாண்டி யார் முடிவு எடுப்பார் எனத் தெரியவில்லை. அதிமுக பாஜக கூட்டணியில் முரண்பாடு இல்லை, மீடியாக்கள் குழப்பாமல் இருந்தால் போதும் எனவும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை தொகுதி என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். மாணவர்கள் வன்முறையை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது, என தெரிவித்த அவர் சாதி ரீதியாக குழந்தைகள் மனதில் நஞ்சு விதைக்கிறார்கள் எனவும் நீட் விஷயத்தில் போராடுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை தூண்டுகிறார் எனவும் தெரிவித்த அவர், திமுக அரசும், அமைச்சர்களும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவி செய்யாமல் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் என்றார். அதிமுக நீட்டை எதிர்த்தாலும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள், ஆனால் திமுக ஆட்சியில் நீட்க்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here