சென்னை: NTCA எனப்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தனது சமீபத்திய அறிக்கையில் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயன்று வருகிறது. இருப்பினும், காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீர் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேநேரம் இந்த அணையை எப்படியாவது கட்டியே தீர வேண்டும் என்பதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. இதனால் இரு மாநில அரசுக்கும் இடையே இந்த விவகாரத்தில் மோதல் போக்கே இருக்கிறது. இதற்கிடையே மேகதாது அணை எந்தளவுக்கு மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேகதாது:
கர்நாடக தலைநகர் பெங்களூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்குக் குடிநீர் வழங்குவதே மேகதாது அணை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 2000ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் குறித்து முதலில் பேசப்பட்டது. காவிரி மற்றும் அர்காவதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தில் அணையைக் கட்டுவதே இதன் நோக்கமாகும். அங்குள்ள மேகதாது அணையில் இருந்து சுமார் 1.5 கிமீ தொலைவில் ஒண்டிகோண்ட்லு என்ற இடத்தில் அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே இந்த அணை கட்டப்பட்டால் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு மிக மோசமான ஆபத்து ஏற்படும் என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காவிரி வனவிலங்கு சரணாலயம் என்பது நீலகிரி நிலப்பரப்பை ஒட்டியுள்ள ஒரு ஒரு பகுதியாகும். இது எம்.எம் மலைகள், ஈரோடு மற்றும் ராமநகரா மற்றும் கர்நாடகாவின் மைசூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வனப் பகுதிகளாகும்.
எச்சரிக்கை:
இது குறித்து NTCA எனப்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள 500 பக்க விரிவான ரிப்போர்ட்டில், “மேகதாது அணை கட்டப்பட்டால் அது அங்குள்ள 50 சதுர கிலோமீட்டர் காடுகளை மூழ்கடிக்கும். இது காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். பிலிகிரி ரங்க நாதசுவாமி கோயில் (பிஆர்டி) புலிகள் காப்பகத்தையும், மகாதேஸ்வரா மலைகள்(எம்எம் ஹில்ஸ்) வனவிலங்குப் பிரிவையும் இணைக்கும் முக்கிய பகுதியாக மேகதாது இருக்கிறது. எனவே, இங்கு அணை என்பது வன விலங்குகளைக் கடுமையாகப் பாதிக்கும் அதேபோல காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை என்பது நீர் வாழ் உயிரினங்களையும் மோசமாகப் பாதிக்கும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது மேகதாது அணை என்பது அந்த பகுதியில் வசிக்கும் வன விலங்குகளுக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இதன் சாரம்சம். மேக தாது அணைக்குத் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த ரிப்போர்ட் வந்துள்ளது.
புலிகள் எண்ணிக்கை:
இதில் மேலும், “மனித நடமாட்டம், உள்கட்டமைப்பு பணிகள், சுரங்க நடவடிக்கைகள் காரணமாக அங்குள்ள பல்லாரி வனப் பிரிவு ஏற்கனவே பாதிக்கப்பட்டு விட்டன. இதனால் இங்கு இப்போதே புலிகள் எதுவும் காணப்படுவதில்லை. பல்லாரி காடுகள் என்பது விவசாய நிலங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆகியவைக்கு நடுவே இருக்கும் குட்டி வனப்பகுதியாக இருக்கிறது. பல்லாரி வனப் பிரிவு மற்ற வனப்பகுதிகளுடன் இணைக்கும் வகையில் இருந்தால், புலிகள் இங்கு வர வாய்ப்புகள் உள்ளது. சர்வே செய்தால் மட்டுமே மேகதாது அணை கட்ட முடியாது. கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பெங்களூரில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் இரண்டு புலிகள் கண்டறியப்பட்டன. இவை குறைவு என்ற போதிலும் பன்னர்கட்டா தேசிய பூங்காவின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. இருப்பினும், பெங்களூர் நகருக்கு அருகில் இருப்பதாலும் அதீத சுற்றுலா காரணமாகவும் இது மிக பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இங்குப் புலிகள் நடமாட்டம் மேலும் குறையவே வாய்ப்புகள் அதிகம் என்ற சூழல் இருக்கிறது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.