மா.சு வால் வெளுத்து வாங்கப்பட்ட மருத்துவர்கள் என்ன நடந்தது நெல்லையில்

0
101
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நெல்லைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் அங்குள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லாததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அங்குள்ள மருத்துவர்களுக்கு போன் போட்ட அமைச்சர், அவர்களை வெளுத்து வாங்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அண்மைக்காலமாக சுகாதாரத்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் குவிந்து வருகின்றன.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு கை அழுகிப் போன சம்பவம்; காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக காகித டீ கப்பை பயன்படுத்தியது என அடுத்தடுத்து சுகாதாரத்துறை தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு திடீர் விசிட் அடித்து அங்குள்ள நிலவரங்களை ஆய்வு செய்து வருகிறார். இதில் ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.

அந்த வகையில், இன்று நெல்லை மாவட்டத்துக்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன், அங்குள்ள திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீரென சென்றார். அப்போது அங்கு ஒரு மருத்துவர் கூட இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், அங்கிருந்த செவிலியரை அழைத்து விசாரித்தார். “என்னங்க.. ஒரு டாக்டர் கூட இல்ல. எப்பவும் இப்படித்தானா”எனக் கேட்டார். அதற்கு செவிலியர், “அப்படி எல்லாம் இல்லை சார்.. இப்போ வந்துருவாங்க” என்றார். இதையடுத்து, தலைமை மருத்துவருக்கு போன் செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “டாக்டர்களுக்கு 9 மணி முதல் 4 மணி வரை டியூட்டி போட்டுருக்கு. ஆனால் 10 மணி ஆகுது.. இப்போ வரைக்கும் ஒரு டாக்டர் கூட வரல. ஏதாவது எமர்ஜென்சி கேஸ் வந்துச்சுனா என்ன செய்வீங்க.” என சரமாரியாக கேள்விகளை கேட்டார்.  

மேலும், டாக்டர் வரலைனா இங்கே வர நோயாளிகளை யாரு பாத்துட்டு இருக்காங்க” என்றும் அவர் கேட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், டியூட்டி டாக்டர்கள் இன்னும் அரை மணிநேரத்துல இங்கே வரணும்” என கோபமாக பேசியபடி அங்கிருந்து சென்றார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அமைச்சர் திடீர் விசிட் அடித்து, மருத்துவர்களை லெப்ட் அண்ட ரைட் வாங்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here