கோவையில் ஓபிஎஸ் அணி நடைபெற்ற போராட்டத்திற்கு அனுமதி பெறாமல் உடலில் கருப்பு மை பூசி பேரணியாக வர முயன்ற இளைஞர்கள் நான்கு பேர் கைது
கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்யக் கோரி டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைந்து தேனியில் மிக பெரிய ஆர்பாட்டம் நடத்தினர். அனைத்து மாவட்டங்களிலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோடநாடு கொள்ளை கொலை தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். இந்த நிலையில் போராட்டத்திற்கு வந்த இளைஞர்கள் நான்கு பேர் உடல் முழுவதும் கருப்பு மை பூசி அதில் “கொடநாடு உண்மை குற்றவாளியை கைது செய்”, “நிழல் குற்றவாளி வேண்டாம்”, “நிஜ குற்றவாளியை கண்டுபிடி” வசனங்களை உடலில் எழுதி பேரணியாக நடந்து வர முயன்றனர்.
ஆனால் இது போன்ற ஏற்பாடுகளுக்கு காவல்துறை தரப்பில் அனுமதி கேட்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து அந்த இளைஞர்கள் நான்கு பேரும் பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.