யூடியூப்பை பார்த்து தயாரித்த பெட்ரோல் குண்டை வாலிபர், சாலையில் வீசி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், அடுத்த சிதம்பரத்தில் இருந்து மீன்சுருட்டி வரை நான்கு வழிச்சாலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது பாலத்தின் அடியில் சர்வீஸ் சாலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த போதை வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்களை விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக கூறியதை அடுத்து, காவல் நிலையம் அழைத்து சென்று அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், ராஜேந்திரசோழகன் (தெற்கிருப்பு) கக்கன் நகரை சேர்ந்த தங்கப்பன் மகன் ஆனந்தராஜ் (23) என்பது தெரியவந்தது.

மேலும் இவர் யூடியூப்பில் பெட்ரோல் குண்டு எப்படி செய்வது என்று பார்த்து, ஒரு குவார்ட்டர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து வெடிக்கச் செய்ததாக தெரியவந்தது.
இதை அடுத்து சம்பவ இடத்தில் சிதறி கிடந்த பாட்டில் சிதறல்களை போலீசார் சேகரித்து எடுத்து சென்றதோடு, சம்பந்தப்பட்ட ஆனந்தராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.