சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலைகளை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, இதன் மூலம் சர்வதேச விலை வீழ்ச்சியின் முழு நன்மையும் இறுதி நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதிசெய்கிறது. முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்கள் மற்றும் தொழில்துறையினருடன் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன, இதில் சர்வதேச விலை வீழ்ச்சிக்கு ஏற்ப சில்லறை விலைகளைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், எளிதாக்கவும், மத்திய அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை வரி 2.5 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்கள் மீதான வேளாண் செஸ் வரி 20 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. 2022, டிசம்பர் 30 அன்று, இந்த வரி அமைப்பு 2024 மார்ச்31 வரை நீட்டிக்கப்பட்டது.
சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை வரி 32.5 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான அடிப்படை வரி 21.12.2021 அன்று 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. இந்த வரிவிகிதம் 2024 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில்களின் தாராள இறக்குமதியை மறு உத்தரவு வரும் வரை அரசு நீட்டித்துள்ளது.
20.07.2023 நிலவரப்படி, கச்சா சோயாபீன் எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய், கச்சா பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் போன்ற முக்கிய சமையல் எண்ணெயின் சர்வதேச விலை கடந்த ஆண்டை விட கடுமையாக குறைந்துள்ளது. அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், ஆர்பிடி பாமாயில் ஆகியவற்றின் சில்லறை விலை ஓராண்டில் முறையே 29.04%, 18.98% , 25.43% குறைந்துள்ளது.
அரசின் சமீபத்திய முயற்சியாக, சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 15.06.2023 முதல் 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.