சென்னை: அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதாகவே கூறப்படுகிறது. பெரும் போராட்டத்திற்கு பின் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்துள்ளது. முதலில் இவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் 8 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடி கொடுக்கப்பட்டது. ஆனால் அப்படி கஸ்டடி கொடுத்தும் கூட அமலாக்கத்துறை இவரை கஸ்டடி எடுக்காமல், உடல்நிலையை காரணம் காட்டி, விசாரிக்காமல் விட்டது. அதன்பின் உச்சநீதி மன்றத்தில் போராடி அமலாக்கத்துறை 5 நாட்கள் கஸ்டடியை பெற்றுள்ளது. இதில் நேற்று முதல்நாள் விசாரணை நடந்தது. முதல்நாள் காலை 8.30 மணிக்கு செந்தில் பாலாஜி காலை உணவு சாப்பிட்டு உள்ளார்.
அதன்பின் 9 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை செந்தில் பாலாஜி விசாரணை செய்யப்பட்டு உள்ளார். அதன்பின் மீண்டும் மதிய உணவு இடைவேளை கொடுக்கப்பட்டு உள்ளது. பின்னர் மாலை 4 மணி வரை விசாரணை செய்யப்பட்டு உள்ளார். அதை தொடர்ந்து மீண்டும் விசாரணை 8 மணி வரை நடந்து உள்ளது. இதையடுத்து இரவு உணவு செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. பின்னர் லேசான சில கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு, அவரை தூங்க அனுமதித்து உள்ளனர். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதாகவே கூறப்படுகிறது.
கேள்விகள்:
பொதுவாக அமலாக்கத்துறை விசாரணைகள் எஸ் ஆர் நோ மாதிரி கேள்விகளாக இருக்கும். அதில் வரும் பதில்களை வைத்து கிளை கேள்விகளை கேட்பார்கள். இதற்கு விளக்கமாக பதில் அளிக்க வேண்டும். செந்தில் பாலாஜியிடம் அப்படி எஸ் ஆர் நோ கேள்விகள் நேற்று 50 கேட்டுள்ளனர். இதற்கு அவர் சொன்ன பதிலை வைத்து கிளை கேள்விகள் 40 கேட்டுள்ளனர். இதற்கு செந்தில் பாலாஜி விரிவாக பதில் அளித்திருக்கிறார். சில விஷயங்கள் குறித்து அவர் நீண்ட நேரம் விளக்கங்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதை எல்லாம் அமலாக்கத்துறை ரெக்கார்ட் செய்துள்ளது.
செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குமூலங்கள் அமலாக்கத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை மேலும் கஸ்டடியில் எடுக்கவும், அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத்துறை விரும்பும் என்கிறார்கள். அதிகாரப் பூர்வமாக இதில் கேள்விகளை அமலாக்கத்துறை கேட்கும் என்கிறார்கள். அதிகாரபூர்வமற்ற முறையில் நிகழ்கால தமிழ்நாடு அரசுக்கு எதிராக சில கேள்விகள் கேட்கப்படலாம் இதனால் அவரை அடைத்து வைக்கவும், விசாரணை செய்யவும் அறைகளை அமலாக்கத்துறை தயார் செய்து உள்ளது.
அதிமுக:
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம்
வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் திமுக ஆட்சியில் நடக்கவில்லை. இவர் தற்போது திமுக அமைச்சர் என்பதை தாண்டி, திமுகவிற்கு இதனால் பிரச்சனை எதுவுமே இல்லை. ஆனால் அதிமுக ஆட்சியில்தான் இது நடந்தது என்பதால் அப்போது நிர்வாகத்தில் இருந்தவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்குத்தான் இந்த விவகாரம் காரணமாக பெரிய சிக்கல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக முடிவு:
திமுக சார்பாக கேள்வி எழுப்பப்படும் பட்சத்தில் மட்டுமே திமுகவிற்கு சிக்கல் ஏற்படலாம். ஆனால் திமுக விற்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதால் திமுக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு இதனால் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜி விசாரணை விவகாரம், அவரின் வாக்குமூலம் ஆகியவற்றை திமுக கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறதாம். இதில் செந்தில் பாலாஜி கொடுக்கும் தகவல்களை வைத்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்கிறார்கள்.