கொழும்பு: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து கடந்த 25 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை செய்தது. கைதான 9 மீனவர்களையும் இலங்கையின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடறப்டை வாடிக்கையாக கொண்டுள்ளது.
மீனவர்களை கைது செய்வதோடு வலைகளை அறுப்பது, படகுகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட அட்டுழியங்களிலும் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது. இலங்கை கடற்படையின் அடாவடி நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. எனினும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக நீடித்துக் கொண்டேதான் உள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடித்து கொண்டு இருந்தனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அழைத்து சென்று இலங்கை கடற்படை சிறையில் அடைத்த நிலையில், தமிழக மீனவர்கள் 9 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 9 தமிழக மீனவர்களையும் இலங்கையின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மீனவர்க்ளை விடுதலை செய்யப்பட்டதால் விரைவில் தமிழகம் திரும்ப இருக்கிறார்கள். இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.