கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி)மற்றும் துறை ரீதியாக கச்சாப் பொருள்கள் வழங்கும் மத்திய திட்டங்கள் (சி.எஸ்.பி) மூலம், எம்.எஸ்.எம்.இ அமைச்சகம், இந்திய பருத்திக் கழகத்திடமிருந்து (சி.சி.ஐ) மட்டுமே பருத்தியை கொள்முதல் செய்கிறது. 2021 செப்டம்பர் மாதத்திலிருந்து மூலப்பொருட்களின் (பருத்தி) விலைகள் அதிகரிப்பது குறித்து கே.வி.ஐ.சி அறிந்துள்ளது. துணியின் விலையைப் பராமரிக்கவும், அதன் மூலம் விற்பனை இலக்கை அடையவும், கதர் துணிகளின் விலை உயர்வு வேறுபாடு அதாவது கிலோவுக்கு ரூ.277, விலை ஏற்றத்தாழ்வு நிதியிலிருந்து பூர்த்தி செய்யப்படுகிறது,
மேலும், சந்தையில் பருத்தியின் விலை அதிகரித்ததால், கே.வி.ஐ.சி 01.04.2022 முதல் ஸ்லிவர் / ரோவிங் விலையை கிலோவுக்கு ரூ.385 ஆக மாற்றியமைக்க வேண்டும். அதன் பின்னர், பருத்தியின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டு, 01.04.2022 அன்றுடன் ஒப்பிடுகையில் 01.04.2023 முதல் சுமார் 40% குறைந்து கிலோவுக்கு ரூ.265 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கே.வி.ஐ.சி. சரியான நேரத்தில் எடுத்த இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக, கே.ஐ.சி.க்களுக்கான மூலப்பொருட்களின் தேவை மற்றும் விநியோகம் பாதிக்கப்படாமல் உள்ளது.
பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. உற்பத்தி குறைவு காரணமாக கதர் நிறுவனங்கள் மூடப்படவில்லை.
இத்தகவலை மத்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.