சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக மேலோட்டமாக பேச்சுகள் எழுந்துள்ளன. விஜய்யின் நடவடிக்கைகளும் அதை உறுதிப்படுத்துவது போல் இருந்து வருகின்றன. இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதுகுறித்துப் பேசியுள்ளார்.
கேள்வி:
தமிழ்நாட்டில் சில நடிகர்கள் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக பேச்சு தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கினால் திராவிடர் கழகம் வரவேற்குமா?
கி.வீரமணி:
எப்போதுமே பொதுத் தொண்டு செய்து வர வேண்டும். கட்சி ஆரம்பிப்பது ரொம்ப சுலபம். ஒருவர் இருந்தால் கூட போதும். தேர்தலில் நிற்கும் ஆசை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
குறிப்பிட்ட வயது இருக்க வேண்டும். அரசியல் சட்டப்படி, தேர்தலில் நிற்க பைத்தியக்காரனாக இருக்கக்கூடாது. இந்த 2 தகுதியும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
எல்லா இடங்களிலும் நான் வருவேன் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் கெட்டிக்காரர்கள். சினிமா துறையில் கெட்டிக்காரராக இருப்பதால், உடனே முதலமைச்சர் ஆகிவிடுவேன் என்பது வேடிக்கை. மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை உணர்ந்த சிலர் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஆசைகள் குதிரைகள் இருந்தால் அதில் சவாரி செய்யலாம். அந்த குதிரைகள் பல நேரங்களில் மண் குதிரைகளாக மட்டுமல்ல, பொய்க்கால் குதிரைகளாகவும் இருந்துவிடும்.
அடிப்படைத் தகுதி என்பது வேறு. கொள்கை, அதை நடை முறைப்படுத்த வேண்டிய லட்சியப் பயணம், அதில் ஏற்படும் தடைகளைத் தாண்டி முன்வைத்த வியூகங்கள், தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் ஆற்றல் எல்லாம் சேர்ந்து கருணாநிதியை தலைவர் ஆக்குகிறது. மக்களின் நம்பிக்கை அவரை ஏற்றுக் கொள்ளச் செய்தது. அவர்கள் நாங்கள் முதலமைச்சர் ஆவோம் என அரசியலுக்கு வரவில்லை. அவர் சினிமாவில் வசனம் எழுதியது கூடுதல் தகுதி, அவர் அடிப்படையில் அரசியல் தலைவர்.
கேள்வி:
பெயரளவில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், அண்ணாமலை தமிழக அரசியலில் நாள்தோறும் பரபரப்பைக் கிளப்பி வருகிறாரே?
உண்மையான எதிர்க்கட்சி தாங்கள் தான் என்றும் பாஜகவினர் சொல்கின்றனரே?
கி.வீரமணி:
4 பேர் இருந்துகொண்டு நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று சொல்லலாமா? மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுத்துள்ளது அதிமுகவுக்குத்தான். அப்படிப்பட்ட நிலையில், சர்க்கஸ் கம்பெனியில் பபூன் வந்து வேடிக்கை காட்டுவது போல ‘நாங்கள் தான் எதிர்க்கட்சி’ என்று சொன்னால் அது எடுபடாது. தனித்து நின்றால் இத்தனை இடங்களாவது வெற்றி பெற முடியும் என்று சொல்லும் தைரியம் உண்டா? இங்கு இருக்கும்போது வீராவேசமாக பேச வேண்டியது. டெல்லி கூப்பிட்டவுடன் தலையாட்டிக் கொண்டே செல்வது. அதிமுக – பாஜக இரண்டும், ஒருவரை ஒருவர் விலக முடியாது என்ற அளவுக்கு மாட்டிக் கொண்டுள்ளனர். கூடா நட்பு கேடாய் விளையும். அதனால் தான் அடிமை சாசனத்தில் இருந்து வெளியே வரச் சொல்கிறோம். இப்போது தான் சிலர் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். காலம் அவர்களின் கண்ணைத் திறக்கும்.