தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் குப்பைகள் சேமிப்பு கிடங்கு மற்றும் மரம் தீப்பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூரில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனையாகும். 1876 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மருத்துவமனையானது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கரூர்
மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு அண்டை மாவட்டங்களுக்குச் சேவைகளை வழங்கி வருகிறது.
தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனை பின்புறம் உள்ள குப்பை சேமிப்பு கிடங்கில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரவு மருத்துவமனை பணியாளர்கள் மரத்தில் இருந்து உதிர்ந்த இலைகளை ஒன்றாக குவித்து தீயிட்டு எரித்து உள்ளனர்.
காற்று பலமாக வீசியதால் தீ பொறி அருகில் இருந்த குப்பை சேமிப்பு கிடங்கில் விழுந்ததில் குப்பைகள் கொழுந்துவிட்டு எரிய தொடங்கின. மேலும், குப்பை சேமிப்பு கிடங்கை ஒட்டி இருந்த மரமும் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.