விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர் . அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் . அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைக்கு துணையாக இருந்த விழுப்புரம் மாவட்டம் , மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அதிகரித்துவரும் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து மொத்தமாக கடத்தி வரப்படும் கஞ்சாவை பிடிக்க விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் , ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது .
இந்நிலையில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் அவர்களின் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வாளர் ஆனந்தன் உதவி ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள் தலைமையில் ரோந்து பணியின்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர் .
போலீசார் விசாரணையில் அந்த சந்தேகத்திற்கு இடமான நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிங்கிபோர் கிராமம் ஜோகிந்திர நாயக் இவரின் மகன் பிந்து நாயக் வயது 29 என்பதும் , அவர் வைத்திருந்த பையினை சோதனை செய்ததில் அவர் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது .
மேலும் போலீசார் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர் கஞ்சா கடத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் மாம்பழப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் சஞ்சய் வயது 21 , வீரப்பன் மகன் கவிஅரசன் வயது 25 மற்றும் மாம்பழப்பட்டு கிராமம் நாயுடு தெருவை சேர்ந்த அபிப் ரகுமானின் மகன் ரஜி புதீன் வயது 27 ஆகியோர் உறுதுணையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது .
மேலும் குற்றவாளிகள் பிந்து நாயக் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் . மேலும் குற்றவாளிகள் நான்கு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.