லக்னோ: பாலியல் உறவுக்கு சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்த 16 வயது சிறுமியின் வாயில் சானிடைசரை ஊற்றப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கைகளில் கிருமி தொற்றுவதை தடுக்க அனைவரும் சானிடைசர்களை பயன்படுத்தி இருப்போம். நோய் கிருமிகளை அழிக்கும் திறன் அதற்கு இருப்பதாக கூறப்பட்டாலும், அதை அருந்தினால் நம்மையும் அழித்துவிடும். இப்படிதான் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தபோது சானிடைசரை குடித்து பலர் உயிரிழந்தார்கள்.
இவ்வளவு ஆபத்தான சானிடைசரை 11 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வாயில் ஊற்றி கொலை செய்து இருக்கிறான் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கொடூரன். 21 வயதான உதேஷ் ராத்தோர் என்பவன் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கிறான். கடந்த ஜூலை 27 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் சிறுமியின் குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தின் மூலமாக வெளியுலகிற்கு தெரியவந்து உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது மாத் லட்சுமிபூர் பகுதியை சேர்ந்த உதேஷ் ராத்தோர், அந்த சிறுமியை தடுத்து நிறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதற்கு அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
ஆத்திரமடைந்த உதேஷ் ராத்தோர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து அந்த மாணவியை பிடித்து அவரது வாயில் சானிடைசரை ஊற்றி இருக்கிறார்கள். இதனை பார்த்த சிறுமியின் சகோதரர் தடுக்க முயன்றபோது அவரையும் 3 பேர் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த கொடூரத்தை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். சாண்டிரைசர் அருந்த வைக்கப்பட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கிருந்து மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த பெண் உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்ட சிறுமியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 3 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து நியாயமான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை 4 தனிப்படைகளை அமைத்து இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல் பாட்டி தெரிவிக்கையில், “உதேஷ் ராத்தோ தனது 3 நண்பர்களுடன் இணைந்து அந்த சிறுமியை சானிடைசர் கொடுத்து அருந்த கட்டாயப்படுத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.