சென்னை: பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்துவரும்நிலையில், முக்கிய மாற்றங்களை தற்போது செய்ய போகிறதாம். இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி, பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது. போலி பத்திரங்களை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. போலி ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு நடப்பதால்தான், பத்திரப்பதிவிற்கு ஆதார் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டது.
அதிகாரிகள் உடந்தை:
அதேபோல சம்பந்தப்பட்ட நிலத்தை, அதன் உரிமையாளர்கள்தான் விற்கிறார்களா? என்பதை கண்காணிக்கவும் பல அதிரடிகளை அரசு பின்பற்றியும் வருகிறது. எனினும், உயிரிழந்தவர்களின் சொத்துக்களை தங்கள் பெயருக்கு சிலர், போலியாக பத்திரப்பதிவு செய்து கொள்கிறார்கள். இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். இப்படி உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது, பலமுறை துறைவாரியான நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. சமீபகாலம்வரை, போலியாக பத்திரப்பதிவு செய்தால், அதனை ரத்து செய்ய கோர்ட்டுக்குதான் போக முடியும். ஆனால், மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க, நாட்டிலேயே முதல் முறையாக போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கியது நம்முடைய தமிழக அரசுதான் என்பதை மறுக்க முடியாது.
மோசடிகள்:
கடந்த 2021ல், தமிழக அரசு பதிவு சட்டத்தில் திருத்தங்கள் செய்தது.இந்த திருத்தங்கள், 2022 ஆகஸ்ட், 16ல் அமலுக்கு கொண்டுவரப்பட்டன. அதன்படி, மோசடி புகார் குறித்து விசாரித்து, மாவட்ட பதிவாளரே அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம். இந்த விபரம் வில்லங்க சான்றிதழிலும் சேர்க்கப்படும். இதற்காக தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் மனம்திறந்து பாராட்டுக்களை தெரிவித்து கொண்டதையும் மறக்க முடியாது. அதனால்தான், இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், பத்திரப்பதிவு விதிமுறைகளில் திருத்தம் செய்ய, பதிவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முக்கியமாக, ஒரு நபரின் சொத்தை அவருக்கே தெரியாமல், ஆள்மாறாட்டம் செய்து, அல்லது போலி ஆவணங்களை தாக்கல் செய்து, பதிவு செய்து விடுகிறார்கள்.
நடைமுறை சிக்கல்கள்:
இதற்குதான் தமிழக அரசு கடிவாளத்தை போடப்போகிறதாம். இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில், அரசின் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தபிறகு,
தமிழகத்தில் இதுவரை, 10,555 மனுக்கள் மீதான விசாரணை முடிக்கப்பட்டு, 959 மோசடி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், சில விஷயங்களில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ஒருவர், ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு சொத்துக்களை விற்கும்போது, அதில் ஏதாவது ஒரு பத்திரம் மட்டும் மோசடியாக நடந்து இருக்கும்.
ஆனால், குறிப்பிட்ட நபர் விற்ற சொத்துக்கள் தொடர்பான அனைத்து பத்திரங்களையும் ரத்து செய்யும்போது, பல பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
பத்திரப்பதிவு:
அதனால்தான், மோசடி நடந்த ஒரு பத்திரத்தை மட்டும் தனியாக பிரித்து, ரத்து செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் தேவையாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் வாரிசுகள் விடுபட்டதாக வழக்கு இருக்கும். அப்போது, ஒருவர் தனக்கான சட்டப்பூர்வ உரிமையுள்ள பாகத்தை விற்பதை, மோசடி பத்திர ரத்து விதியில் இருந்து நீக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் தொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, திருத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.