தமிழ்நாடு முழுவதும் மழை தரும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் அவ்வப்போது சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பத்து மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர வேறு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை மறுதினம் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.