இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை.! பாகிஸ்தான் கோர்ட் அதிரடி தீர்ப்பு.!

0
196
இம்ரான் கான்

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர் 2018 முதல் 2022 வரை பிரதமராக பதவி வகித்தார். கடைசியாக 2022 ஏப்ரலில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை
தழுவியதை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார். ஆட்சி கலைந்தாலும் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் எம்.பியாக தொடர்ந்தார்.

பாகிஸ்தானில் பரபரப்பு:

தற்போது பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இம்ரான் கானுக்கு டோஷகானா வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியை பார்த்தால் இம்ரான் கான் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அரசுக்கு சொந்தமான அன்பளிப்புகளை முறைகேடான வகையில் விற்றதாக தெரிகிறது.

இம்ரான் கான் கைது:

இதன் மதிப்பு 140 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்க்கு அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் கருவூல முறைகேட்டில் சிக்கினார். டோஷகானா என்பதற்கு கருவூலம் என்று அர்த்தம். இதுதொடர்பாக அந்நாட்டு தேர்தல் ஆணையமும் களமிறங்கியது. இதுதொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:

இதன் விசாரணையில் தான் குற்றமற்றவர் என்று இம்ரான் கான் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் தப்பிக்க முடியவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், கருவூல முறைகேடு வழக்கில் இன்று (ஆகஸ்ட் 5) அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறை தண்டனையும், அபராதமும்:

அதில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை உத்தரவால் இம்ரான் கானின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதன்மூலம் இவர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் கைது:

இந்நிலையில் இஸ்லாமாபாத் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இம்ரான் கான் லாகூரில் உள்ள ஸமான் பார்க் இல்லத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். இந்த சூழலில் தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை:

இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அவர் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. ஆனால், இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று இம்ரான் கான் தரப்பு கூறியிருந்தது. இந்நிலையில் முக்கியமான வழக்கில் தற்போது சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here