ஆசனூா் சாலையில் பேருந்தை வழிமறித்து தும்பிக்கையால் கரும்பு தேடிய காட்டு யானை
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சத்தியமங்கலம் மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
காட்டு யானைகள் சாலையில் பயணிக்கும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்புகளைப் பறித்து உண்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியாா் பேருந்து கா்நாடக மாநிலம் மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் அடா்ந்த வனப் பகுதி வழியாக கொண்டிருந்தது.
ஆசனூரை அடுத்துள்ள காரப்பள்ளம் என்ற இடத்தில் பேருந்து சென்றபோது சாலையின் நடுவே நின்றிருந்த யானை தனியாா் பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனா். யானையைக் கண்டவுடன் ஓட்டுநா் பேருந்தை நிறுத்திவிட்டாா். அப்போது பேருந்தின் முன்பகுதிக்கு வந்த யானை தனது தும்பிக்கையால் பேருந்தின் மேல் பகுதியில் கரும்புகள் ஏதாவது உள்ளனவா என்று தேடிப் பாா்த்தது.
ஏதும் கிடைக்காததால் சிறிது நேரம் அங்கு நின்ற யானை பின் சாலை ஓரமாகச் சென்று பேருந்துக்கு வழிவிட்டது. இதையடுத்து பேருந்து புறப்பட்டு சென்றது. யானை அமைதியாக பேருந்துக்கு வழிவிட்டதைக் கண்டு பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.