மணிப்பூர் செல்லும் “இந்தியா” கூட்டணி.! 3 மாதங்கள் ஆகியும் பாஜக-வின் அமைதிக்கு காரணம் என்ன.?

0
119
பிரதமர் நரேந்திர மோடி

இன வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய “இந்தியா” கூட்டணியின் எம்.பி.க்கள் குழு வரும் 29,30-ந் தேதிகளில் அம்மாநிலம் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் குக்கி இனக்குழுவினர் மீது மைத்தேயி இனக்குழுவினர் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் குக்கி இனமக்கள் மிக மோசமான பாதிப்புகளை எதிர் கொண்டிருக்கின்றனர். குக்கி இனப்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூரம் கண்டு உலகமே அதிர்ந்தது.

அதேநேரத்தில் 3 மாதங்களாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என
26 எதிர்க்கட்சிகளின் “இந்தியா கூட்டணி” வலியுறுத்தி வருகிறது. மேலும் நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவர் கவுரவ் கோகோய்
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்துள்ளார்.

இதனை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக் கொண்டுள்ளார். இத்தீர்மானத்தின் மீதான விவாத தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் 5 நாட்களாக முடக்கி உள்ளனர்.

இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கறுப்பு உடை அணிந்து வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் 26 கட்சிகளின் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் குழு நாளை மறுநாள்- ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் மாநிலம் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறது.

ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் சென்று நிலைமைகளை ஆய்வு செய்து,
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மணிப்பூர் மாநிலத்தில் முகாமிட்டு பல்வேறு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் மணிப்பூரில் அமைதி திரும்பாமல் தொடர்ந்து வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here