சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இறுதி போட்டி இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இன்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது, தொடக்க வீரர்களான ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளுடன் 116 ரன்களை இந்திய அணி பெற்றது.
பின்பு, விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுடன் 97 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியதால் , 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தங்கம் வென்றது. இலங்கை அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தது.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் தங்கப்பதக்கம் வென்ற நமது கிரிக்கெட் அணியின் சிறப்பான ஆட்டம் இது. அவர்களின் அபார சாதனையால் நாடு மகிழ்ச்சி அடைகிறது. நமது மகள்கள் தங்கள் திறமை, மன உறுதி, மற்றும் குழுப்பணி ஆகியவற்றால் விளையாட்டு அரங்கிலும் மூவர்ணக் கொடியை உயரமாக பறக்க விடுகிறார்கள். உங்கள் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்றார்.